புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) மீதான பிகேஆர் தலைவருடைய நிலை அவருக்குச் சாதகமாக அமையாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார்.
“அந்த என்இபி ‘எதிர்ப்பு நிலையை பொது மக்கள் மேற்கத்திய திட்டம் எனப் பார்க்கின்றனர். ஏனெனில் அந்த என்இபி கொள்கை அம்னோ சேவகர்களுக்கு மட்டுமே நன்மை அளித்துள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறிக் கொள்ள விரும்புகின்றன.”
“அதனால் அன்வார் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். என்இபி சில அரசாங்கச் சேவகர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்பதை நிரூபிக்க வெற்றி பெற்ற சில மலாய்க்காரர்களை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்,” என மகாதீர் தெரிவித்தார்.
அன்வாருக்கு எப்போதும் விருப்பமான இலக்கு செல்வந்தரான சையட் மொக்தார் அல்புஹாரி ஆவார்.
பில்லியனர் பட்டியலில் உள்ள சில மலாய்க்காரர்களில் அவரும் ஒருவர் என்றும் அவர் சொன்னார்.
“அன்றாடம் அவர் சையட் மொக்தாரைத் தாக்குகிறார். ஆனால் அரசாங்க உதவிகளைப் பெறும் மலாய்க்காரர்
அல்லாத பில்லியனர்கள் சேவகர்கள் என அழைக்கப்படுவதில்லை,” என மிங்குவான் மலேசியாவில் இன்று
வெளியான கட்டுரையில் மகாதீர் அவ்வாறு எழுதியுள்ளார்.
இப்போது பல மலாய் இளைஞர்கள் அம்னோ சேவகர்கள் என அழைக்கப்படுகின்றவர்களை வெறுப்பதாகவும்
அவர் எழுதியுள்ளார்.
“அம்னோ தலைமையிலான அரசாங்கம் வழங்கிய உபகாரச் சம்பளங்கள் காரணமாக நூறாயிரக்கணக்கான
மலாய் இளைஞர்கள் கல்வி கற்றுள்ளது பற்றி அன்வார் ஒரு போதும் குறிப்பிடுவதில்லை.”
“அந்த நூறாயிரக்கணக்கான இளைஞர்களும் சேவகர்களா ?” என்று மகாதீர் வினவினார்.
1998ம் ஆண்டு அம்னோவிலிருந்து நீக்கப்பட்டது முதல் அன்வார், அரசாங்கம் புதிய பொருளாதாரக்
கொள்கையை (என்இபி) அமலாக்கும் விதத்தை குறை கூறி வருகிறார்.
இனங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சரி செய்வதற்கு குறிப்பிட்ட கால வரம்புடன்
உருவாக்கப்பட்டது அந்தக் கொள்கை ஆகும்.
அம்னோ அந்த முறையை தவறாகப் பயன்படுத்தி தனது சேவகர்கள் மட்டும் பயனடைவதை உறுதி செய்ததாக அன்வார் நம்புகிறார். அதற்குப் பதில் எல்லா மலேசியர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு தேவை அடிப்படையில் புதிய கொள்கை வரையப்பட வேண்டும் என அவர் யோசனை கூறியுள்ளார்.
அத்தகைய முறை இயல்பாகவே மலாய்க்காரர்களுக்கு அதிக நன்மை அளிக்கும் என்றும் அவர் கருதுகிறார்.