பினாங்கு சிஎம்: பதவிக்கு மரியாதை கொடுங்கள்

1bookபினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்,  முன்னாள் செய்தியாளர் கீ துவான் சை-இன் நூல் வெளியீட்டை இரத்துச் செய்த பினாங்கு கிளப்பின் செயல் மன்னிக்கத்தக்கதல்ல என்று சாடியுள்ளார்.

“தவறு செய்தல் மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம். தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் லிம் குவான் எங் உங்களை மன்னிக்கலாம் ஆனால், முதலமைச்சரால் மன்னிக்க இயலாது”, என்று சனிக்கிழமை வேறோர் இடத்தில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுக்குத் தலைமையேற்றபோது அவர் கூறினார்.

1book1“லிம் குவானிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். ஏனென்றால் நான்  சாதாரண மனிதன். ஆனால், முதலைமைச்சரிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டால் நான் அப்பதவியின் மதிப்பைத் தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அது மக்கள் கொடுத்த பதவி. அங்கே நான் மக்கள் பிரதிநிதி”.

குவான் எங் இவ்வாறு சொன்னதும் அந்நிகழ்வில் கலந்துகொண்ட சுமார் 150 பேர் கரவொலி எழுப்பி அதை வரவேற்றனர்.

முதலமைச்சர், கீயின் இரண்டாவது நூலான ‘Ask for No Bullshit, Get Some More’ என்னும் நூலை லிம் அந்தப் பிரபலமான கிளப்பில் பிப்ரவரி 28-இல் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தி அந்நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

“அரசியல் சார்புள்ளதாக” கருதப்படலாம் என்பதால்  அந்நிகழ்வை நடத்த விரும்பவில்லை என்று கிளப் தம்மிடம் தெரிவித்ததக கீ கூறினார்.

கிளப், நாளேடுகளுக்கு அனுப்பிய கடிதமொன்றில் “நிகழ்வு இரத்து செய்யப்பட்டதற்கும் லிம் அதில் கலந்துகொள்வதற்கும் தொடர்பில்லை. லிம், எங்களின் கெளரவ உறுப்பினர். துன் டாக்டர் லிம் சொங் இயு தொடர் சொற்பொழிவு வரிசையில் எங்கள் அழைப்பின்பேரில் முதலாவது சொற்பொழிவை ஆற்றியவரே லிம்தான்”, என்று விளக்கி இருந்தது.

“நிகழ்ச்சி இரத்தானால் லிம்முக்கு அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக தலைவரும் செயலவை உறுப்பினர்களும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார்கள்”, என்று கிளப் தலைவர் இயப் சூன் ரீ கூறி இருந்தார்.

அது குறித்து கருத்துரைத்த லிம், ஒரு முதலமைச்சருக்கு அவருடைய மாநிலத்திலேயே வரவேற்பு இல்லாமல் போனது இதுவே முதல்முறை என்றார்.

“என்னை எதற்காக கெளரவ உறுப்பினராக்கினார்கள் என்பது புரியவில்லை. லிம் குவான் எங் என்பதற்காக அல்லாமல் முதலமைச்சர் என்பதற்காக அதைக் கொடுத்திருக்கிறார்கள்- ஆனாலும் கீ-இன் நூலை வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி இல்லை”.

சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) தப்பாக நினைப்பார் என்று கிளப் முன்வைத்துள்ள காரணத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை என லிம் கூறினார்.

“அது அவ்வளவு மோசமான விசயமா? பணத்தைக் கையாடுவோர்மீது ஆர்ஓஎஸ் நடவடிக்கை எடுக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பணத்தைக் கையாடல் செய்பவர்கள்கூட இப்போது சிக்கலில் சிக்கிக்கொள்வதில்லையே”, என்றவர் கிண்டலாகக் கூறினார்.

உண்மையிலேயே வருத்தப்படுகிறார்களா?

1book2கிளப் மன்னிப்பு கேட்டு தம் அலுவலகத்துக்கும் கடிதம் அனுப்பியதாக லிம் கூறினார்.

உண்மையிலேயே வருத்தப்படுபவர்கள் என்றால் இரத்தான நிகழ்வுக்குப் பதிலாக இன்னொரு நிகழ்வை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றாரவர்.

“இல்லையேல் வருத்தப்படுவதில் பொருளில்லை. Tiada maaf bagi mu (உங்களுக்கு மன்னிப்பு கிடையாது)”, என்றார்.

கீ, பினாங்கு எழுத்தாளர். இதற்குமுன் அவர் எழுதிய ‘No More Bullshit, Please, We’re All Malaysians’ என்ற நூல் நல்ல விற்பனையைக் கண்டது. 2010-இல் Reader’s Digest நடத்திய ‘நம்பத்தக்க மலேசியர்’ கருத்துக்கணிப்பில் அவர் 34 இடத்தைப் பெற்றார்.