2008 தேர்தல்களில் ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய எதிர்பாராத தோல்விகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரி செய்து மேம்பாடு காணாவிட்டால் தமக்கு முந்திய பிரதமர் எதிர்நோக்கிய அதே தலைமைத்துவ மாற்றத்தை அவரும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார்.
“அவர் நல்ல அடைவு நிலையைப் பெறா விட்டால் நிச்சயம் தலைமைத்துவத்தை மாற்ற வேண்டிய தேவை
ஏற்படும்,” என அவர் சொன்னார்.
22 ஆண்டுகள் மலேசியாவை வழி நடத்தியுள்ள மகாதீர் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்
அவ்வாறு கூறியிருக்கிறார்.
நஜிப்புக்கு முந்திய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை பதவியிலிருந்து வீழ்த்துவதில் மகாதீர் முக்கியப்
பங்காற்றியுள்ளார்.
“ஏமாற்றங்கள் அதிகரித்திருக்கும். அவருக்கு எதிராக சவால் விடுக்கப்படும் சாத்தியமும் உண்டு. அது
இயல்பானது.”
“ஆளும் அம்னோ கட்சியில் மகாதீருக்கு இன்னும் நிறைய செல்வாக்கு உள்ளது. அடித்தட்டு
உறுப்பினர்களிடையே அவருக்கு கணிசமான ஆதரவு உள்ளது,” என மெர்தேக்கா மய்யத் தலைவர் இப்ராஹிம் சுபியான் கூறினார்.
என்றாலும் எதிர்க்கட்சிகளுடைய செல்வாக்கு பெருகி வருவதால் தமது பாரம்பரியத்தை பாதுகாக்க மகாதீர்
முயலுவதாகத் தோன்றுகிறது.
அதனால் மலேசியாவை ஆளும் பிஎன் -னில் ஆதிக்கம் பெற்ற அம்னோவை வழி நடத்தும் நஜிப்புக்கு
நெருக்குதல் அதிகரித்துள்ளது.
வரும் ஜுன் மாதத்திற்குள் மலேசியாவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் சிறிய பெரும்பான்மையுடன்
ஆளும் கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நஜிப் அறிமுகம் செய்துள்ள தாராளமய நடவடிக்கைகள் குறித்து மகாதீர் வெளிப்படையாகவே கேள்வி
எழுப்பியுள்ளார்.
ஏஎப்பி