இப்படி ஒரு போட்டிமிகுந்த தேர்தல் மலேசிய வரலாற்றில் இதற்குமுன் நடந்ததில்லை என்று கூறத்தக்க வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையப்போகிறது என்கிறார்கள். எனவே, சரவாக்கிலும்கூட பிஎன்னுக்கும் பக்காத்தான் ரக்யாட்டுக்குமிடையில் போட்டி கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
2008 பொதுத் தேர்தலில் மாநிலத்தின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பிஎன் ஒட்டுமொத்தமாக வென்றது. அப்போது சாபாவும் சரவாக்கும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பிஎன்னுக்கு 40 விழுக்காட்டு இடங்களை வழங்கின. ஆனால்,நிலைமை அப்படியே இருக்கவில்லை. 2011 மாநிலத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அந்தக் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் 13வது பொதுத் தேர்தலில் கூட்டரசு நிலையில் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
இக்கட்டுரை, 2011 மாநிலத் தேர்தலில் அதற்குமுன் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்கிறது. அவை கூட்டரசு ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவானவையா என்பதையும் ஆராய்கிறது.
2008-இல், தீவகற்ப மலேசியாவில் எதிரணியினர் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதபடி செய்தாலும்கூட சரவாக்கில் எதுவும் செய்ய இயலவில்லை.அது, பிஎன் கோட்டையாகத்தான் தொடர்ந்து விளங்கியது.
ஆனால், 2011 மாநிலத் தேர்தல் முடிவு, சரவாக் கோட்டையில் பிஎன்னின் பிடி தளர்ந்து வருவதைக் காண்பித்தது. சட்டமன்றத்தில் 71 இடங்களில் 16-ஐ பக்காத்தான் வென்றது.
பிஎன்னுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டிருந்தது. 2008-இல் கிடைத்த 64.2 விழுக்காடு வாக்குகள் 2011-இல் 55.4 விழுக்காடாகக் குறைந்தது. அதாவது 8.8 விழுக்காடு சரிவு.
பார்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து தவிர்த்து மற்ற சரவாக் பிஎன் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
கடுமையாக பாதிக்கப்பட்டது சரவாக் ஐக்கிய மக்கள் கட்சிதான். சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அக்கட்சி 13 இடங்களை இழந்தது. வாக்கு எண்ணிக்கை 6.2 விழுக்காடு குறைந்தது.
சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி இரண்டு இடங்களில் தோற்றது. பார்டி ரக்யாட் சரவாக் அதன் ஒன்பது இடங்களில் ஒன்றை இழந்தது.
பக்காத்தான் அணியில், மிகப் பெரிய வெற்றி கண்டது டிஏபி. அது 12 இடங்களை வென்றது.
பிகேஆர் அது போட்டியிட்ட 49 இடங்களில் மூன்றில்தான் வென்றது என்றாலும் அது பெற்ற வாக்கு எண்ணிக்கை 17.4 விழுக்காடு கூடி இருந்தது. மற்ற எதிரணிக் கட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடுமையான போட்டி நிலவிய பெலாகுஸ் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வாகை சூடினார்.
சீனப் புரட்சி
இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் சீன வாக்காளர்கள். 2011 மாநிலத் தேர்தலில் பிஎன்னுக்கு சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில் வழக்கமாகக் கிடைக்கும் வாக்குகளில் 40விழுக்காடு குறைந்தது.
தயிப்பின் தலைமைத்துவம் பிடிக்கவில்லை என்பதுடன் சீனர்கள் எஸ்யுபிபி-யைப் புறக்கணித்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. எதிர்க்க வேண்டிய நேரத்தில் முதலமைச்சரை எதிர்க்காமல் இருந்தது, பிஎன் தலைவர்களின் ஊழல் விவகாரங்கள், ‘அல் கித்தாப்’, ‘அல்லாஹ்’ விவகாரங்கள் ஆகியவை அவற்றுள் சில.
உண்மையில், சீனர்களின் புரட்சி 2006-இலேயே தொடங்கி விட்டது. அப்போதே எதிரணி, சீனர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 15-இடங்களில் ஏழைக் கைப்பற்றியது. கூச்சிங் சீனர்களிடையேதான் இப்புயற்சி முதலில் தோன்றியது. மாநிலத் தலைநகரில் சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 5 தொகுதிகளில் நான்கைக் கைப்பற்றுவதில் எதிரணி வெற்றி பெற்றது.
2010-இல், சிபு இடைத் தேர்தலில் பிஎன்னுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே களத்தில் இறங்கிப் பரப்புரை செய்த போதிலும் டிஏபி வெற்றி பெற்றது. சீனப் புரட்சி மாநில முழுவதும் பரவி வருவதற்கு அது அறிகுறியாக அமைந்தது.
பூமிபுத்ரா வாக்காளரிடையேயும், ஈபான் இனத்தவரிடையேயும் (14.1 விழுக்காடு) பிடாயுக்களிடையேயும் (13 விழுக்காடு) பிஎன் ஆதரவு குறிப்பிடத்தக்க வகையில் சரிந்தது. மலாயு/மெலானாவ் வாக்காளரிடையே அதற்கான ஆதரவு வலுவாக இருந்தது.
முஸ்லிம்-அல்லாத வாக்காளர்கள் பிஎன்னைப் புறக்கணிப்பதற்கு, அவர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் கருதுவதும், பாரம்பரிய நிலச் சர்ச்சைகளும், சமத்துவமற்ற மேம்பாடு, அணைக்கட்டு விவகாரம், ‘அல்-கித்தாப்’ விவகாரம் போன்றவையும் காரணங்களாகும்.
ஆனால், முஸ்லிம் வாக்காளர்கள் இன்னமும் பிஎன்னைத்தான் ஆதரிக்கிறார்கள். அவர்கள் காலம்காலமாகவே அரசை நம்பியே இருந்து வந்திருக்கிறார்கள். மாநில அரசியலில் முஸ்லிம் பூமிபுத்ராக்களின் அதிகாரம் பறிபோகலாம் என்ற பயத்தின் காரணமாக அவர்கள் ஏறத்தாழ அரசாங்க அடிவருடிகளாகவே மாறி விட்டார்கள்.
போட்டி வலுக்கிறது
2011 மாநிலத் தேர்தலில் பிஎன் 71 இடங்களில் 55-யைக் கைப்பற்றி வசதியான வெற்றியைப் பெற்றது என்றாலும் போட்டி கடுமையாகவே இருந்தது.
தயிப்பின் செல்வாக்கு, குறிப்பாக சீனர்களிடையே குறைந்து போனதால், நஜிப்பே களத்தில் இறங்கிப் பாடுபட்டார். கூட்டரசு அமைச்சரவையும் அவருடன் சேர்ந்து களத்தில் இறங்கி முழுமூச்சாக பரப்புரையில் ஈடுபட்டது.
ரிம2.8 பில்லியன் மதிப்புள்ள 165 புதிய திட்டங்களை அறிவித்தனர். ரிம15 மில்லியன் பெறுமதியுள்ள மான்யங்களையும் அன்பளிப்புகளையும் அள்ளி வழங்கினர்.
சரவாக்கில் பல கிராமப் பகுதிகள் மேம்பாட்டைக் கண்டிராதவை. அங்கு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது ஆளும் கட்சிக்குச் சாதகமாக அமைந்தது. கிராமப்புற வாக்காளர்கள் பிஎன் பக்கமாக அணி திரண்டனர்.
போட்டி மிகுந்த தொகுதிகளில் வாக்குகள் விலை கொடுத்து வாங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் போட்டியிட்ட பா’கெலாலான் தொகுதியில் போட்டி கடுமையாக இருந்ததால் வாக்காளர்களுக்கு ரிம1,000-த்திலிருந்து ரிம2,000 வரை கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சரிபாஸ் தொகுதியில் மிகக் குறைந்த தொகை ரிம 20 மட்டுமே கொடுக்கப்பட்டதாம்.
வாக்குகளுக்கு விலை கொடுப்பது பெரும்பாலும் பலனளித்துள்ளது. ஆனாலும், பா’கெலாலான் தொகுதியில் அது வேலை செய்யவில்லை. பிஎன் எத்தனையோ தந்திரங்களைக் கயாண்ட போதிலும் அங்கு பாருதான் வெற்றிபெற்றார்.
இது, மாற்றம் வேண்டும் என்ற மக்களின் விருப்பம் உறுதியாக இருந்தால் அதை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என்பதைக் காண்பிக்கிறது. இப்படி மாற்றமென்னும் காற்று சரவாக்கின் பல பகுதிகளில் வீசத் தொடங்கி விட்டது. ஆனால், கூட்டரசு நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட அது போதுமா?