பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலம் (ESSZONE) அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார்.
10 மாவட்டங்களை உள்ளடக்கிய அந்த மண்டலம் இன்று அமலுக்கு வந்த கிழக்கு சபா பாதுகாப்புத் தளபத்தியத்திற்கு (ESSCOM) சட்டப்பூர்வ அடித்தளத்தை வழங்குகின்றது.
குடாட், கோத்தா மருது, பித்தாஸ், பெலுரான், சண்டக்கான், கினாபாத்தாங்கான், லஹாட் டத்து, குனாக்,
செம்போர்ணா, தாவாவ் ஆகியவை அந்த மாவட்டங்கள் என அவர் பெயர் குறிப்பிட்டார்.
2013ம் ஆண்டுக்கான பொதுப் பாதுகாப்பு பராமரிப்பு விதிமுறைகள் கீழ் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு சபா
பாதுகாப்பு மண்டலக் குழு அந்த 10 மாவட்டங்களையும் நிர்வாகம் செய்யும் என்றும் நஜிப் சொன்னார். சபா
முதலமைச்சர் அந்தக் குழுவுக்குத் தலைவராக இருப்பார்.
முதலமைச்சருக்கு தலைவர் என்ற முறையில் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் உதவி செய்வார். அவரது
பெயரும் குழு உறுப்பினர்கள் பெயரும் பின்னர் அறிவிக்கப்படும்.
206வது போலீஸ் தினத்தை ஒட்டி கோலாலம்பூர் ஜாலான் செமாராக்கில் போலீஸ் பயிற்சி மய்யத்தில் நடந்த
அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்ட பின்னர் நஜிப் நிருபர்களிடம் பேசினார்.
ESSZONE, சபா மக்களுடைய ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதோடு கிழக்கு சபாவின் பாதுகாப்பு, பொது
ஒழுங்கு, வளப்பம் ஆகியவற்றையும் வலுப்படுத்தும் என நஜிப் தெரிவித்தார்.
1962ம் ஆண்டுக்கான பொதுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் கீழ் ESSZONE அமைக்கப்படுவதற்கு யாங்
டி பெர்துவான் அகோங் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
பிப்ரவரி 12ம் தேதி சுலு பயங்கரவாத ஊடுருவலைத் தொடர்ந்து ESSCOM அமைக்கப்பட்டது.
கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலத்தின் (ESSZONE) தலைமையகம் லஹாட் டத்துவில் இயங்கும். பிரதமர்
தலைமை ஏற்கும் கண்காணிப்புக் குழு ஒன்றுக்கு அது பொறுப்பேற்கும்.
ESSZONE குழுவை அமைத்ததின் மூலம் அரசாங்கம் கிழக்கு சபாவைப் பாதுகாக்கவும் ஊடுருவல்
பிரச்னைக்குத் தீர்வு காணவும் முழுமையான அணுகுமுறையை பின்பற்றுவதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.