சபாவில் வெளியிடப்பட்ட எல்லா மை கார்டுகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு உண்மையான சபா மக்களுக்கு மட்டும் அந்த ஆவணத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற யோசனையை அந்த மாநிலத்தில் கடாஸான் – டுசுன் – முருட் ஆகிய இனங்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று பிஎன் அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன.
பெனாம்பாங்கில் நேற்று நிருபர்களிடம் Upko எனப்படும் ஐக்கிய பாசோக்மோமோகுன் கடாஸான் டுசுன் முருட்
அமைப்பின் தலைவர் பெர்னார்ட் டொம்போக் அதனைத் தெரிவித்ததாக போர்னியோ போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆவணத்திற்குத் தகுதி இல்லாதவர்களையும் மோசடியான வழிகளில் அதனைப் பெற்றவர்களையும் களையெடுப்பதே அந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என டொம்போக் சொன்னார்.
அந்த நிருபர்கள் சந்திப்பின் போது உடனிருந்த PBS என்ற பார்ட்டி பெர்சத்து சபா தலைவர் ஜோசப் பைரின் கிட்டிங்கான், PBRS என்ற பார்ட்டி பெர்சத்து ராக்யாட் சபா தலைவர் ஜோசப் குருப் ஆகியோரும் அந்த யோசனையை ஆதரித்தனர்.
சபா மாநிலத்தில் கடாஸான் – டுசுன் – முருட் ஆகிய இனங்களைப் பிரதிநிதிக்கும் முக்கிய பிஎன் கட்சிகளாக
UPKO, PBS, PBRS ஆகியவை திகழ்கின்றன.