புதிய சுயேச்சை வானொலி நிலையம் இன்றிரவு ஒலிபரப்பைத் தொடங்குகின்றது

RFMபுதிய சுயேச்சை வானொலி நிலையம் ஒன்று இன்றிரவு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன்  நடத்தப்பட்ட முழுப் பேட்டியுடன் தனது ஒலிபரப்பை தொடங்குகிறது.

RFM என அழைக்கப்படும் அந்த Radio Free Malaysia லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் Radio Free Sarawak சிற்றலை ஒலிபரப்பு நிலையத்தின் சகோதர வானொலி நிலையமாகும்.

RFM இன்றிரவு 9 மணிக்கு மத்திம அலை (MW) 1,359kHz-ல் தனது ஒலிபரப்பைத் தொடங்குகின்றது. அந்த நிலையம் அன்றாடம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை பஹாசா மலேசியாவில் ஒலிபரப்பை மேற்கொள்ளும்.

அன்வார் 1998ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அவருடைய குரலைப் பெரும்பாலான மலேசியர்கள் வானொலியில் கேட்டிருக்க முடியாது என்பதால் இன்றிரவு ஒலிபரப்பாகும் அன்வார் பேட்டி வரலாற்றுப்பூர்வமானதாக இருக்கும் என பிகேஆர் கூறியுள்ளது.

“நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கும் மலேசியர்கள் காத்திருக்கும் வேளையில் பக்காத்தான் தலைவர்களுடைய கருத்துக்களை அவர்கள் செவிமடுக்க முடியும். அதனைத் தொடர்ந்து அடுத்து வரும் ஆண்டுகளில் மலேசியாவுக்குச் சிறந்த யோசனைகளை அவர்கள் முடிவு செய்ய இயலும்,” அன்வார் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் பிகேஆர் தெரிவித்தது.

தனியார் நிதி அளிப்பு, நன்கொடைகளைக் கொண்டு இயங்க முடியும் என்றும் RFM நம்பிக்கை கொண்டுள்ளது.