பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் டாக்ஸி ஒட்டுநர்களை பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு குற்றம் சாட்டிய பிகேஆர் வியூகம் இயக்குநர் ராபிஸி இஸ்மாயில், ஆயிரம் தனி நபர்களுக்கு
டாக்ஸி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று நஜிப் விடுத்த அறிவிப்பிலிருந்து அது தெளிவாகிறது எனக்
கூறினார்.
புக்கு ஜிங்கா, மக்கள் தேர்தல் கொள்கை அறிக்கை, பொதுக் கொள்கை ஆகியவற்றின் வழி பக்காத்தான்
ராக்யாட் அறிவித்துள்ள பொருளாதாரத் திட்டங்கள் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றன
என்பதை ‘வெளிப்படையாக ஒப்புக் கொள்வதை’ நஜிப்பின் நடவடிக்கை காட்டுகிறது என்றும் ராபிஸி
சொன்னார்.
“பக்காத்தான் கொள்கைகள் நாட்டை நொடித்துப் போகச் செய்து விடும் என அம்னோ கூறிக் கொள்வதற்கு
நேர்மாறாக பக்காத்தான் கொள்கைகள் சாத்தியமானவை என்பதும் அதன் அர்த்தமாகும்.”
மூன்றாவதாக நஜிப், பக்காத்தான் கொள்கைகளையும் திட்டங்களையும் ‘காப்பியடிக்கும்’ அளவுக்கு விரக்தி
அடைந்துள்ளார் என்பதையும் அது நிரூபிக்கிறது,” என ராபிஸி இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த பிஎன் தலைவருடைய நடவடிக்கையைக் கண்டித்த அவர், பிஎன் இது வரை தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிடவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
தனி நபர்களுக்கு டாக்ஸி அனுமதிகள் கொடுக்கப்பட வேண்டும் என எதிர்த்தரப்பு நீண்ட காலமாகப் போராடி வருவதாகவும் ராபிஸி சொன்னார்.
தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு டாக்ஸி அனுமதிகள் வழங்கப்பட்டு அவை பின்னர் ஒட்டுநர்களுக்கு குத்தகைக்குக் கொடுக்கப்படும் நடப்பு முறை ரத்துச் செய்யப்படும் என பக்காத்தான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.
அதற்குப் பதில் ‘டாக்ஸி தொழில் முனைவர்களை’ அதிகமாக உருவாகும் பொருட்டு அனுமதிகள் நேரடியாக
டாக்ஸி ஒட்டுநர்களுக்கு வழங்கப்படும்.