அம்னோ எம்பி: அரசியல் வன்முறைக்கு எதிரான நிலைபாட்டை வலுப்படுத்த வேண்டும்

1saifu13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்துவரும் அரசியல் வன்முறையைக் கண்டிப்பதில் அம்னோ இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கருத்தை அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா ஏற்றுக்கொள்கிறார்.

“அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கடுமையாகக் கண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது”, என அவர் கினிடிவி நேர்காணலில் கூறினார்.

அம்னோ அது குறித்து போலீசில் புகார் செய்திருப்பதையும் தெமர்லோ எம்பி-ஆன சைபுடின் சுட்டிக்காட்டினார்.

“சில வேளைகளில் அதைத் தூண்டிவிடுவோர் இரு தரப்பையும் சேராதவர்களாகவும் இருப்பதுண்டு”, என்றார்.

பிஎன் ஒரே அடியாக மாற்றரசுக் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை ஒதுக்கித்தள்ளவும் கூடாது என்றாரவர்.

“மக்கள் பக்காத்தான் ரக்யாட் வேட்பாளர்களையும் எம்பி-களாக தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அவர்கள் எதிரணியின் தேர்தல் கொள்கைகளுக்கும் ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதுதான் பொருள். எனவே, அதையும் பரிசீலிப்பதே நியாயமாகும்”, என்றாரவர்.

“நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் சட்டமுன் வரைவுகளையும் விவகாரங்களையும் முன்வைப்பது ஒரு தரப்பின் ஏகபோக உரிமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆலோசனை கலப்பு வேண்டும்”.

முழு நேர்காணலையும் காண KiniTV-க்குச் செல்க

TAGS: