13வது பொதுத் தேர்தலுக்கு வழிகோல நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் பிஎன் அரசுக்குப் பயம் கிடையாது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ்.
பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்காதிருப்பது ஒரு குற்றமல்ல என்று கூறிய நஸ்ரி, எப்போது கலைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு என்றார்.
“நாங்கள் (பிஎன்) ஒன்றும் பயப்படவில்லை. எப்படியும் ஏப்ரல் 28 வரத்தான் போகிறது. அதைவிட்டுத் தப்பி ஓட முடியாது.
“எதிரணியைக் கண்டு நாங்களா பயப்படுகிறோம். அவர்கள்தான் நடுங்கிப் போயுள்ளனர். முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்கிறார்கள். அவர்களுக்குத்தான் பயம். எங்களுக்கு அல்ல”, என்று நஸ்ரி குறிப்பிட்டார்.
அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க இவ்வளவு தாமதம் காட்டியதில்லை என்பதை நஸ்ரி ஒப்புக்கொண்டார். அதுவும், நெகிரி செம்பிலான் சட்டமன்றம் நாளை இயல்பாகவே கலைந்துவிடும்.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் அதன்பின் 60 நாள்கள்தான். நெகிரி செம்பிலானுக்கும் அதே 60 நாள்கள்தான். தேர்தல் ஆணையம் கூட்டு (கூட்டரசு-மாநில)த் தேர்தலை நடத்த விரும்புவதால் தேர்தலுக்குப் பொருத்தமான நாளைத் தெரிந்தெடுக்கும்”, என்றார் அவர்.
‘செய்ய வேண்டியது இன்னும் உள்ளது’
“மக்களுக்கு உதவுதல் உள்பட நாங்கள் செய்ய நினைத்ததை எல்லாம் செய்து முடிப்போம். அதன்பின்னரே தேர்தல்”.
பிரதமர் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வந்து விட்டார். கலந்துகொள்ளாத நிகழ்வுகளும் இல்லை. இந்நிலையில் “எப்போதுதான் தேர்தல்” என்று வினவியதற்கு, ஒருவேளை செய்ய வேண்டியது இன்னும் இருக்கக்கூடும் என்று நஸ்ரி பதிலளித்தார்.
பொதுத் தேர்தல் ஏப்ரலிலா, மே மாதத்திலா என்று மீண்டும் கேட்கப்பட்டதற்கு மே-இல் நடக்கலாம் என்றார்.
“ஏப்ரல் 28 வரை அவகாசம் உள்ளது( நாடாளுமன்றத்தைக் கலைக்க). பயப்பட வேண்டாம் என்று மாற்றரசுக் கட்சியிடம் சொல்லி வையுங்கள். ஏப்ரல் 28 எங்கும் ஓடிப் போகாது. ஏப்ரல் 28 வந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படும். தேர்தலும் வரும்”, என்று நஸ்ரி மேலும் சொன்னார்.