அல்டான்துயா வழக்கை மறுவிசாரணை செய்வது பற்றி கனி பட்டேல் பரிசீலிப்பார்

1agஅல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் விடுத்துள்ள கோரிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் பரிசீலிக்கும். சட்டத்துறைத் தலைவர்  அப்துல் கனி பட்டேல் இன்று இதனைத் தெரிவித்தார்.

1ag1ஆனால், அந்த மங்கோலிய பெண்ணின் கொலை பற்றி மீண்டும் விசாரணை செய்ய ஒரு நியாயமான காரணம் தேவை. அதற்குப் புதிதாக ஆதாரம் இருக்க வேண்டும் என்றாரவர்.

“வழக்குரைஞர் மன்றத்தின் கோரிக்கையைப் பரிசீலிப்போம். ஆனால், எல்லா வழக்குகளையும் மறுவிசாரணை செய்ய இயலாது. மறுவிசாரணை செய்ய நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஒரு புதிய ஆதாரம் இருக்க வேண்டும். அந்த வழக்கைப் பொறுத்தவரை விசாரணை எல்லாம் நடந்து முடிந்து விட்டது”, என்று கனி (வலம்) கூறினார்.

“இது ஒரு மோசமான முன்மாதிரியாக அமைந்து விடலாம்…….ஆயிரக்கணக்கான வழக்குகள் இருக்கின்றன. அவற்றை மீள்பார்வை செய்வதென்றால் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சை வைத்து மட்டுமே மறுவிசாரணை தொடங்கி விட முடியாது. ஆதாரம் வேண்டும்”.

வழக்குரைஞர் மன்றம் அதன் 66வது ஆண்டுக்கூட்டத்துக்குப் பின்னர் அல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் சட்டத்துறைத் தலைவரைக் கேட்டுக்கொண்டது.

மூத்த வழக்குரைஞர் சிசில் அப்ரேஹம்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.

அல்டான்துயா கொலை தொடர்பில், அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவின்படிதான் தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இரண்டாவது சத்திய பிரமாணம் செய்தார் என்பதை சிசில் தம்மிடம் ஒப்புக்கொண்டார் என்று ஒரு வழக்குரைஞரான அமெரிக் சித்து வழக்குரைஞர் மன்றக் கூட்டத்தில் தகவல் வெளியிட்டதை அடுத்து மன்றம் இவ்வாறு செய்தது.

இம்மாதத் தொடக்கத்தில் பாலசுப்ரமணியம் இறந்துபோனது பிரச்னை அல்லவென்றும் வழக்கை மறுவிசாரணை செய்ய போதுமான ஆதாரம் தேவை என்றும் கனி கூறினார்.

“முதலாவது, இரண்டாவது சத்திய பிரமாணங்கள் முன்பே சொல்லப்பட்டவைதான். இப்போது அமெரிக் சித்து ஒரு வழக்குரைஞரைக் குறிப்பிட்டிருக்கிறார். இவ்விவகாரத்தை வழக்குரைஞர் மன்றம் ஒழுங்கு வாரியத்துக்குக் கொண்டு செல்வதாக தெரிகிறது. எனவே, அவர்களே இதைக் கவனித்துக்கொள்ளட்டும்”.

வழக்குரைஞர் மன்றத்துக்கென தனி ஒழுங்கு வாரியம் இருப்பதால் அங்கு அதைக் கொண்டுசெல்வதுதான் நல்லது என்றும் ஏஜி சொன்னார்.