சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் குடும்பம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சரவாக் ஊழல் பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் இணைய மனுவில் 14,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனு 400 தனிக் காகிதங்களில் அச்சிட்டு அவற்றை இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் சிவில் சமூக
அமைப்புக்கள் சமர்பித்தன.
“janji ditepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன)” என்ற தமது சுலோகத்தை மெய்பிப்பது இனி நஜிப்பைப் பொறுத்தது என அந்த மனுவை தயாரிப்பதில் ஈடுபட்ட மூவரில் ஒருவரான லினுஸ் சுங் கூறினார். அவர் சரவாக்கைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.
“தாயிப் நிரபராதி என்றால் அவருக்கு எதுவும் நேராது,” என நஜிப் உதவியாளர்களில் ஒருவருடம் அந்த
மனுவைக் கொடுத்த பின்னர் சுங் சொன்னார்.
அந்த மனுவை தமது எஜமானரிடம் கொண்டு செல்வதாகவும் உதவியாளர் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் சுங் குறிப்பிட்டார்.
தாயிப் உறவினர்களுக்கும் வர்த்தகக் கூட்டாளிகள் எனக் கூறப்பட்ட சிலருக்கும் இடையில் நிகழ்ந்ததாக
சொல்லப்பட்ட விவாதங்களை உள்ளடக்கிய வீடியோவை Global Witness என்னும் மனித உரிமைப் போராட்ட
அமைப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.
நிலத்தை மலிவாக கொள்முதல் செய்வதற்கு முதலமைச்சருடன் தங்களுக்கு உள்ள தொடர்புகளை தாங்கள்
எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தாயிப் உறவினர்களும் வணிகர்களும் பேசிக் கொள்வதை அந்த
வீடியோ காட்டியது.
Global Witness வெளியிட்டுள்ள தகவல்களுடன் சரவாக்கில் புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள் திட்டத்தின்
கீழ் 12 அணைகளைக் கட்டும் திட்டத்தில் தாயிப் குடும்பம் சம்பந்தப்பட்டுள்ளது பற்றியும் ஆர்சிஐ விசாரிக்க
வேண்டும் எனச் சுங் வலியுறுத்தினார்.
பொதுத் தேர்தல் நெருங்குவதால் ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி நஜிப் பதில் சொல்ல வேண்டும் என அவர்
கேட்டுக் கொண்டார்.
இதனிடையே அந்த விவகாரத்தை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதாகத் தெரிகிறது என அந்த
சிவில் சமூக அமைப்புக்களுடன் சென்றிருந்த சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி சொன்னார்.
அதற்கு நேர்மாறாக சுவாரம் மீது சங்கப் பதிவதிகாரி அலுவலகமும் மற்ற அரசாங்க அமைப்புக்களும் வெகு
வேகமாக நடவடிக்கை எடுத்ததுடன் ஊடகங்களிலும் அவற்றுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது என்றார்
அவர்.
“பலர் ஊழல் குறித்த பல புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏன்
நடவடிக்கை எடுக்கவில்லை.”
“இது அரசாங்கம் கடைப்பிடிக்கும் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. அது முடிவுக்கு வர வேண்டும் என
நாங்கள் விரும்புகிறோம். தாயிப்பை விசாரிக்கத் தொடங்குங்கள்.”