மே 13 கலவரத்தை அடிப்படையாகக் கொண்ட தண்டாபுத்ரா படத்தைத் தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தப்பில்லை என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன்மீது டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சினம் கொண்டிருக்கிறார்.
“அமைச்சர் (என்பதால் அப்படித்தான் பேசுவார் என்றாலும்) கோவின் செய்கை ஏமாற்றமளிக்கிறது.
“அவர் அமைச்சராக இருக்கப்போவது இன்னும் சில நாள்களுக்குத்தான்.தயவு செய்து அறிவுபூர்வமாக பேசுங்கள்”, என அவர் சாடினார். லிம், இன்று கோலாலும்பூரில் அவரது கட்சியின் இணையத்தள தொலைக்காட்சி நிலையமான UbahTV-ஐ தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“கோ, தாம் அம்னோவின் கைப்பாவை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்”, என்றவர் குறிப்பிட்டார்.
“தப்பான தகவல்களையும் இட்டுக்கட்டப்பட்ட நிகழ்வுகளையும் கொண்ட இனவெறுப்பைத் தூண்டும் நோக்கமுள்ள ஒரு இனவாதப் படத்தைத்” தனிப்பட்ட முறையில் திரையிடலாம் என்றால் ஆபாசப் படங்களையும் அனுமதிக்கலாம்தானே என்றவர் வாதிட்டார்.