பிஆர்எம் என்ற Parti Rakyat Malaysia எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜோகூரில் எந்தத் தொகுதியிலும் போட்டியிடாது. காரணம் அது பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றுடன் மும்முனைப் போட்டிகளைத் தவிர்க்க விரும்புகிறது.
இவ்வாறு அதன் தேசியத் துணைத் தலைவர் எஸ்கே கொங் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதும் அதன் நோக்கம் என
அவர் சொன்னதாக மலாய் ஏடான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“பிஆர்எம் தலைமைத்துவம் ஒரு முடிவு எடுக்குமாறு தனது மாநிலத் தலைமையகத்துக்கு பணித்தது. நாங்கள் அந்த முடிவைப் பின்பற்றுவோம்…”
“வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு பக்காத்தான் ராக்யாட்டுக்கு பிரகாசமாக இருப்பதாக
நாங்கள் நம்புகிறோம். அது வெற்றி பெற்றால் இனவாத அரசியல் முடிவுக்கு வரும்,” என்றும் கொங்
சொன்னதாக அந்த ஏடு தெரிவித்தது.
என்ற போதிலும் ஜோகூரில் உள்ள அதன் பதிவு பெற்ற 1,500 உறுப்பினர்களில் யாரும் சுயேச்சையாகப்
போட்டியிடுவதை கட்சி தடுக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு சுயேச்சையாக போட்டியிட ஒர் உறுப்பினர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளார்.
பிஆர்எம் முன்பு ஜோகூர் பாரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஜோகூர் ஜெயா, ஸ்துலாங், தஞ்சோங் புத்ரி,
கேலாங் பாத்தா சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது.
ஆனால் அது எந்த இடத்திலும் வெல்லவில்லை.