சிலாங்கூர் மசீச தலைவர் டோனல்ட் லிம் சியாங் சாய், அம்மாநில வாக்காளர்கள் மசீசவை முற்றாக அழித்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். 2008-இல் கட்சி மோசமான தோல்வியைக் கண்டிருந்தாலும் கடந்த ஐதாண்டுகளில் கடுமையாகப் பாடுபட்டு மக்களுக்குச் சேவையாற்றியுள்ளது என்றார்.
“கடந்த தேர்தலில் வாக்காளர்கள் எங்களை (மசீச) ஒதுக்கிவிட்டார்கள் என்றாலும் நாங்கள் எங்கள் சேவையைத் தொடர்ந்தோம்.
“மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறோம். நாமம் போட்டு விடாதீர்கள்”. ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
2008 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மசீச, நாடாளுமன்றத்துக்கு ஏழு இடங்களிலும் சட்டமன்றத்துக்கு 14 இடங்களிலும் போட்டியிட்டது. ஆனால் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியயும் (பாண்டான்) இரண்டு சட்டமன்ற இடங்களையும் (சுங்கை பீலேக், கோலா குபு பாரு) மட்டுமே வென்றது.
சிலாங்கூரில்தான் மசீசவின் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்று கூறிய மசீச உதவித் தலைவரும் துணை நிதி அமைச்சருமான லிம், இதுவே 13வது பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு பெரும் பலமாகும் என்றார்.
சிலாங்கூரில் 260,000 மசீச உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 2008 தேர்தலில் இவர்களில் மிகப் பலர் ஆளும்கட்சியை ஆதரிக்கவில்லை என்பதுதான் கவலைதரும் விசயமாகும்.
“மசீச தொகுதித் தலைவர்களும் வேட்பாளர்களும் கட்சி உறுப்பினர்களின் வாக்குகளுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் மசீச வேட்பாளர்களுக்கும் மற்ற பிஎன் பங்காளிக் கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறோம்.
சிலாங்கூரில் குறைந்த ஆதரவுக்கான காரணம் என்னவென்று வினவியதற்கு வாக்காளர்களில் பெரும்பாலோர் நன்கு படித்தவர்கள், அவர்கள் தேசிய விவகாரங்கள், வேட்பாளர் தகுதி முதலியவற்றை அளவிட்டு கடைசி நேரத்தில் வாக்களிப்பது பற்றி முடிவெடுக்கிறார்கள் என்றார்.
‘40விழுக்காட்டினர் மதில்மேல் பூனையாக உள்ளனர்’
அவரது கணக்கில், படித்தவர்கள் வாழும் பகுதிகளில் ஆளும் கட்சியும் மாற்றரசுக் கட்சியும் தலா 30 விழுக்காட்டு ஆதரவைப் பெற்றுள்ளன. அங்கு 40விழுக்காட்டு வாக்காளர்கள் எந்தப் பக்கம் சாய்வது என்பதை முடிவுசெய்யாத மதில்மேல் பூனைகளாக உள்ளனர்.
“இந்த 40விழுக்காட்டு வாக்காளர்கள் அரசியல் சூழலை, தேசிய பொருளாதாரத்தை, பிரதமரின் தலைமைத்துவத்தை, அரசாங்கத்தின் கொள்கைகளை, கட்சித் தலைவர்களை, வேட்பாளர்களின் தகுதிகளை அலசி ஆராய்ந்து அதன்பின்னரே யாருக்குத் தங்கள் வாக்கு என்பதை முடிவு செய்வார்கள்.
“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொண்டுவந்த அரசியல், பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் மதில்மேல் பூனைகளாக உள்ளவர்களின் மனத்தை வெற்றிகொள்ளக்கூடும்”,என்றவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரின் பிஎன் தேர்தல் இயக்குனர் பொறுப்பை நஜிப்பே ஏற்றுக்கொண்டிருப்பது அம்மாநிலத்தை மீட்டெடுப்பதில் பிஎன் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது.
மாநிலத்தில் மசீச வாய்ப்புப் பற்றி வினவியதற்கு, சுங்கை பீலேக், கோலா குபு பாரு தவிர்த்து சிக்கிஞ்சான் காஜாங், பண்டாமாரான் ஆகிய பகுதிகளை வெற்றி கொள்ள மசீச நம்பிக்கை கொண்டிருப்பதாக லிம் கூறினார்.