ஹரியான் மெட்ரோ பினாங்கு அரசாங்க விளம்பரங்களை நிராகரித்தது

ubah TVபக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் பினாங்கு மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள வறுமை ஒழிப்புத் திட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கு இடமளிக்க பிரபலமான மலாய் நாளேடான ஹரியான் மெட்ரோ மறுத்து  விட்டது.

அந்த நாளேடு எதிர்க்கட்சிகளுக்கு விளம்பர இடங்களை விற்பதில்லை என பினாங்கு அரசாங்கத்துக்குத்
தெரிவிக்கப்பட்டது.

“எங்களுடைய வறுமை ஒழிப்புத் திட்டத்தை விளம்பரம் செய்ய மாநில அரசாங்கம் அந்த ஏட்டில் இடம்
கோரியது. இவ்வாண்டு இறுதிக்குள் வறுமையை ஒழிப்பதும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களை  பதிந்து கொள்ளுமாறு அழைப்பதும் அந்த விளம்பரத்தின் நோக்கமாகும்,” என்று பினாங்கு முதலமைச்சர் லிம்  குவன் எங் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

“அந்த விளம்பரம் எதிர்த்தரப்பான பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்திடமிருந்து வருவதால் அதனை ஏற்றுக்
கொள்ள முடியாது என அந்த ஏடு கூறியது.”

டிஏபி கட்சியின் இணையத் தொலைக்காட்சி அலைவரிசையான உபா டிவி-யை ( UbahTV ) தொடக்கி வைத்த
பின்னர் லிம் நிருபர்களைச் சந்தித்தார்.

அந்த விளம்பரங்கள் அரசியல் சார்புடையவை அல்ல என்றும் மாநில அரசிடமிருந்து கொடுக்கப்படுகின்றது
என்றும் தெரிவித்த பின்னரும் ஹரியான் மெட்ரோ தனது நிலையில் உறுதியாக இருந்ததாக அவர் மேலும்
சொன்னார்.

“மலேசியாவில் எல்லாம் வினோதமாக இருக்கிறது. நாங்கள் மக்களுக்குப் பணம் கொடுக்க விரும்புகிறோம்.
அவர்கள் அதனை வேண்டாம் என்கிறார்கள்.”