சுவா ஜுய் மெங் டிஏபி-யிடமிருந்து பக்ரி, கூலாய் தொகுதிகளை நாடக் கூடும்

chuaஜோகூரில் கேலாங் பாத்தா தொகுதி டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு சென்று விட்டதால் அந்த  மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜுய் மெங், பக்ரி, கூலாய் நாடாளுமன்றத் தொகுதிகளை நாடக் கூடும்.

வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுவா நோக்கம் கொண்டுள்ள மூன்றாவது தேர்வு சிகாமாட் நாடாளுமன்றத்  தொகுதியாகும்.

அந்த விவரங்களை மாநில பிகேஆர் தேர்தல் இயக்குநர் ஸ்டீவன் சூங் இன்று வெளியிட்டார்.

அது சுவாவின் தனிப்பட்ட விருப்பம் அல்ல என்றும் அடித்தட்டு உறுப்பினர்களுடைய அவா என்றும் சூங்
சொன்னார்.

“மத்திய தலைமைத்துவம் ஒரு நிலையை எடுத்துள்ளது. ஆனால் எங்களுக்கு, லிம் கிட் சியாங் கேட்டுக்
கொண்டதால் கேலாங் பாத்தா அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு ஈடாக லிம் ஒர் இடத்தை கொடுக்க
வேண்டும். நாங்கள் பக்ரி, கூலாய், சிகாமாட் ஆகியவற்றைக் கேட்க விரும்புகிறோம்,” என மலேசியாகினி
தொடர்பு கொண்ட போது சூங் தெரிவித்தார்.

“அது அடித்தட்டு உறுப்பினர்களுடைய எண்ணமாகும். என்றாலும் அது டிஏபி துணைத் தலைவர் தான் கோக்
வாய், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோர் தலைமையில் இயங்கும் பேச்சு வார்த்தைக்
குழுவைப் பொறுத்தது.”

“இந்த வாரத்திற்குள் உடன்பாடு காணுமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன். எங்களுக்கு நாளைக்கே தெரிந்து
விட்டால் மிகவும் நல்லது. அடித்தட்டு உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட விரும்புகின்றனர். நாம்
விஷயங்களைத் தீர்க்கவில்லை என்றால் அடித்தட்டு உறுப்பினர்கள் எப்படி வேலை செய்ய முடியும் ?” என
அவர் வினவினார்.

கேலாங் பாத்தா தொகுதியை டிஏபி-யிடம் கொடுப்பதற்கு பிகேஆர் இணங்கியுள்ளதாக மார்ச் 18ம் தேதி
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.