பிகேஆர் வரும் பொதுத் தேர்தலில் கோம்பாக், பாண்டான், லெம்பா பந்தாய் ஆகிய தொகுதிகளில் கடுமையான போட்டியை எதிர்நோக்கும் என அக்கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.
நேற்றிரவு கோம்பாக்கில் ஒரு செராமாவில் உரையாற்றிய அன்வார், சிலாங்கூரிலும் கோலாலும்பூரிலும், தம் மகள் உள்பட பிகேஆர் பெரும்புள்ளிகள் களமிறங்கும் மூன்று தொகுதிகளில் கட்சி உறுப்பினர்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“அம்னோ, கோம்பாக்கில் (பிகேஆர் துணைத் தலைவர்) அஸ்மின் அலியையும், பாண்டானில் (வியூக இயக்குனர்) ரபிஸி ரம்லியையும், லெம்பா பந்தாயில் (உதவித் தலைவர்) நூருல் இஸ்ஸாவையும் தோற்கடிப்பதில் முனைப்பாக இருக்கிறது”, என அன்வார் குறிப்பிட்டார்.
2004-இல், அஸ்மின் பிஎன்னின் அனுவார் சைட் அஹ்மட்டை 6,867 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி கொண்டார்.
2008-இல், நூருல் இஸ்ஸா 2,895 வாக்கு பெரும்பான்மையில் அம்னோ மகளிர் தலைவியைத் தோற்கடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ரபிஸி, தேர்தலில் குதிப்பது இதுவே முதன்முறை. அவர், முன்னாள் மசீச தலவர் ஒங் தி கியாட்டின் கோட்டையான பாண்டானில் களமிறங்குகிறார்.
ஆனால், பிஎன் அங்கு ஒங்-கைக் களமிறக்குமா என்பது தெரியவில்லை, ஏனென்றால் மசீச தலைவர் சுவா சொய் லெக் வேறு திட்டம் வைத்திருப்பார்போல் தெரிகிறது.