பக்காத்தான் ராக்யாட் பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தை அமைக்கிறது

NSCதேசியப் பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) செய்யத் தவறியதைச் சரி செய்வதற்கு பாதுகாப்பு ஆலோசனை மன்றம்  (எஸ்ஏசி) ஒன்றை பக்காத்தான் ராக்யாட் அமைத்துள்ளது.

“நாட்டின் பாதுகாப்பை நிலை நிறுத்த வேண்டிய தனது அடிப்படைப் பணியிலிருந்து என்எஸ்சி திசை மாறிச்
சென்று விட்டதால் எங்கள் எஸ்ஏசி அமைக்கப்படுவது அவசியமாகியுள்ளது,” என அது இன்று கூறியது.

“அந்த மன்றம் அடிப்படைக் கடமையிலிருந்து விலகி பிஎன்-உடைய அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்தும்  பணிக்குச் சென்று விட்டது,” என பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் இன்று பிற்பகல் பிகேஆர்  தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்நியர்களுக்கு சட்டவிரோதமாக குடியுரிமையை வழங்குவதிலும் என்எஸ்சி சம்பந்தப்பட்டுள்ளதாக கடந்த
ஆண்டு தாம் கூறிய குற்றச்சாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால் அதனை ‘தீய எண்ணம் கொண்ட கற்பனைக் கதை’ என தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.

அண்மையில் சபா, லஹாட் டத்துவில் பிலிப்பினோ ஊடுருவல்காரர்கள் மேற்கொண்ட படையெடுப்பு
என்எஸ்சி-யின் தோல்விகளில் ஒன்று என்றும் மாஹ்புஸ் தெரிவித்தார்.NSC1

பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் என்எஸ்சி-யை மீண்டும் சரியான பாதையில் வைப்பதற்கான வழிகளை எஸ்ஏசி   பரிந்துரைக்கும் என்றும் அவர் சொன்னார்.

எஸ்ஏசி அமைக்கப்படும் தகவலை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார். ஒய்வு  பெற்ற முன்னாள் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் முகமட் ஹஷிம் ஹுசேன் அதற்குத் தலைமை  தாங்குவார் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்காப்புத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் அந்த மன்றத்தில் இடம் பெறுவர் என்றும் முழுக் குழு காலப்
போக்கில் அறிவிக்கப்படும் என்றும் ஹஷிம் கூறினார்.

லஹாட் டத்து ஊடுருவல் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையில்
அரசியல் தலையீடு அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது என அவர் சொன்னார்.

“எடுத்துக் காட்டுக்கு சபாவில் ஏற்கனவே இராணுவத் தளங்களும் தளபத்தியங்களும் உள்ளன.
ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை உள்ளூர் இராணுவத் தளபதிகள் மேற்கொண்டிருக்க
வேண்டும்.”

“மாறாக 200 ஊடுருவல்காரர்களை சமாளிக்க மிகவும் உயர் நிலையிலான ஜெனரலையும் போலீஸ்
தலைவரையும் ஏழு இராணுவப் பட்டாளங்களையும் நாம் அனுப்பினோம்,” என ஹஷிம் சொன்னார்.