நோர் முகமட்: பிஎன் பெரும்பாலான எதிர்க்கட்சி மாநிலங்களை மீண்டும் கைப்பற்ற முடியும்

NOR13வது பொதுத் தேர்தலில் பினாங்கு உட்பட எதிர்த்தரப்பு வசமுள்ள பெரும்பாலான மாநிலங்களை மீண்டும்  கைப்பற்றும் ஆற்றலை பிஎன் பெற்றுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் கூறியிருக்கிறார்.

நாட்டின் உருமாற்றத் திட்டங்களுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவு அடிப்படையிலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மக்கள் புரிந்து கொண்டுள்ளதின் அடிப்படையிலும் தாம் அவ்வாறு சொல்வதாக அவர் சொன்னார்.

மத்திய அரசாங்கத்தின் உண்மைப் போக்கை பினாங்கு வாக்காளர்கள் இப்போது உணர்ந்து கொண்டிருப்பார்கள்  என நான் நம்புகிறேன். பினாங்கில் எதிர்த்தரப்பு ஆட்சி செய்த போதிலும் நாங்கள் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமலாக்கியுள்ளோம்,” என அவர் ஜார்ஜ் டவுனில் 2013ம் ஆண்டுக்கான இளைஞர் விழாவைத்  தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் ஏழு அல்லது எட்டு மாநிலங்களில் வெற்றி பெற எதிர்த்தரப்புக் கூட்டணி நம்பிக்கை
கொண்டுள்ளதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறுவது பற்றி நோர் முகமட் கருத்துரைத்தார்.

“மக்கள் இலட்சியங்களைக் கொண்டிருப்பதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் உண்மை அரசியல் நிலைக்கு
இணங்க நாங்கள் (பிஎன்) புத்ராஜெயாவை மட்டுமின்றி 2008ல் இழந்த இடங்களையும் மீண்டும் பிடிப்போம்.”

தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் மீண்டும் நிறுத்தப்படக் கூடாது எனக் கேட்டுக்
கொள்ளும் பதாதைகள் தொங்கவிடப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட நோர் முகமட், “அது என்னைப்
பாதிக்கவில்லை. அதனை விவகாரமாக்கக் கூடாது,” என்றார்.

பெர்னாமா