இந்துக்களை அவமானப்படுத்தியதற்காக கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்லி நூர்டினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்த தங்கள் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதற்காக எட்டு அரசு சாரா அமைப்புக்கள், பிகேஆர் ஆகியவற்றின் பேராளர்கள் இன்று சிறிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்
கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் அந்த சுயேச்சை எம்பி மீது புகார்
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுல்கிப்லி மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்ட பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாக அவர்கள்
எச்சரித்தனர்.
“அது இஸ்லாத்தை அவமானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தால் அந்த சமயத்தைச் சிறுமைப்படுத்திய நபர் 48 மணி நேரத்துக்குள் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்.”
“மற்ற சமயங்கள் என வரும் போது உள்துறை அமைச்சும் போலீசும் ஏன் தேர்வு செய்கின்றனர்,” என தமிழர்
நடவடிக்கைக் குழுவின் துணைத் தலைமைச் செயலாளர் கண்ணன் ராமசாமி வினவினார்.
சுல்கிப்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் என மலேசிய இந்திய முன்னேற்ற சங்கத் தலைமைச் செயலாளர் எஸ்
பாரதிதாசன் கூறினார்.
சுல்கிப்லி தண்டிக்கப்பட வேண்டும் என போர்ட் டிக்சன் சட்டமன்ற உறுப்பினர் எம் ரவி தெரிவித்தார்,
அந்த ஆர்ப்பாட்டம் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸில் இன்று நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பாஸ் ஆதரவாளர் பிரிவான WargaAman, Pertubuhan Prihatin Bekas Anggota Keselamatan Malaysia ஆகிய அமைப்புக்களின் பேராளர்களும் பங்கு கொண்டனர்.
இதனிடையே சுல்கிப்லி மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இந்திய சமூகத்தினர் பிஎன் -னுக்கு
வாக்களிப்பதைத் தடுக்கும் பொருட்டு சுல்கிப்லி உரையின் பிரதிகளை அவர்களுக்கு விநியோகம் செய்யப்
போவதாக பிகேஆர் பூச்சோங் தொகுதித் தலைவர் எஸ் முரளி எச்சரித்தார்.
கெடா, பினாங்கிலும் ஆர்ப்பாட்டம்
கெடா கூலிமில் இன்று ஆறு அரசு சாரா அமைப்புக்கள் போலீசில் புகார் செய்தன. அத்துடன் அங்கு
சுல்கிப்லிக்கு எதிராக நடந்த அமைதியான பேரணியில் 500 பேர் கலந்து கொண்டனர்.
சுல்கிப்லியின் கருத்துக்கள் மீது இந்துக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும் சட்டத்துறைத் தலைவர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களுடைய பேச்சாளர் கே கோபால கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
கூலிம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டன. பாடாங் செராயில் காலை 10 மணிக்கு பேரணி நடத்தப்பட்டது.
புக்கிட் மெர்டாஜாமில் டிஏபி சோஷலிச இளைஞர் தலைவர் சத்தீஸ் முனியாண்டி பண்டார் பெர்டாவில் போலீசில் சுல்கிப்லிக்கு எதிராகப் புகார் செய்தார்.
பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் பகைமையைத் தூண்டுவதற்கு எதிரான சட்டமான- குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவின் கீழ் சுல்கிப்லியின் கருத்துக்களை தண்டிக்க முடியும் என்றும் சத்தீஸ் சொன்னார்.
ஆகவே நடவடிக்கையை போலீஸ் தாமதப்படுத்துவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றார் அவர்.
“பெர்க்காசா, உத்துசான் மலேசியா, இப்ராஹிம் அலி, ரித்துவான் தீ அப்துல்லா, சுல்கிப்லி நூர்டின், பிஎன்
சம்பந்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு மலேசியச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக என்பதை
உள்துறை அமைச்சரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் தெளிவுபடுத்த வேண்டும்.”
“அவர்கள் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் குறித்து புகார் செய்யப்பட்ட போதிலும் இது வரை அவர்களுக்கு
எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”
சுல்கிப்லிக்கு எதிராகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதற்கு எதிராகவும் பட்டர்வொர்த் ஸ்ரீ
மகா மாரியம்மன் கோயில் மண்டபத்தில் இன்னொரு பேரணிக்கு இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பல அரசு சாரா அமைப்புக்கள் கலந்து கொள்கின்றன.
பெர்க்காசா உதவித் தலைவருமான சுல்கிப்லி ஐந்து நிமிடங்களுக்கு ஒடும் அந்த வீடியோவில் “தங்களைச்
சேதப்படுத்திய வெள்ளத்தை தடுத்து நிறுத்த தவறி விட்டதாக இந்து தெய்வச் சிலைகளை
சிறுமைப்படுத்தியுள்ளார்.”
ஆனால், அந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பதோ, சுல்கிப்ளியின் பேச்சு திரித்து
வெளியிடப்பட்டதா என்பதோ தெரியவில்லை.
சுல்கிப்லியின் கருத்துக்களைப் பெற மலேசியாகினி மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.