சாமிவேலு: நான் வெற்றிபெறக்கூடிய வேட்பாளனே, அதில் எனக்கு சந்தேகமில்லை

1datuk samyமஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, 13வது பொதுத் தேர்தலில் தம்மைக் களமிறக்கினால் வெற்றி பெறுவது உறுதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நீண்ட காலம் மஇகா தலைவராக  இருந்த அவர் 2008-இல் சுங்கை சிப்புட்டில் தோல்வியுற்றார் என்றாலும், “வெற்றிபெறத்தக்க வேட்பாளரா என்றால்- நான் வெற்றிபெறக்கூடிய வேட்பாளனே. அதில் எள்ளளவும் ஐயமில்லை”, என்று நம்பிக்கையுடன் உரைத்துள்ளார்.

1datuk samy 1இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய சாமிவேலு, பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தம்மை ஒரு வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் தேர்தலில் போட்டியிட தாம் தயார் என்றார்.

எதிர்வரும் தேர்தலில் மஇகா தலைவர் ஜி.பழனிவேலும் மற்ற தலைவர்களும் பாதுகாப்பான தொகுதிகளில்தான் போட்டியிடுவார்களா என்று வினவியதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.

“இந்நாட்டில் பாதுகாப்பான தொகுதி என்று எதுவுமில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் உயிரைக் கொடுத்துப் போராட வேண்டும். ஒருவர் பாதுகாப்பான தொகுதிதான் வேண்டும் என்று விரும்பினால் போட்டியிடாமல் இருப்பதே உத்தமம்”, என்றாரவர்.

மஇகா தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய சாமிவேலுவை அரசாங்கம், இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்குமான உள்கட்டமைப்பு சிறப்புத் தூதராக நியமனம் செய்தது.