வாக்களிப்பு நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக 13வது பொதுத் தேர்தலில் அமலாக்கப்படும் பல அம்சங்களில் நான்கு புதிய விதிகளும் அடங்கும்.
அழியா மையைப் பயன்படுத்துவது, அஞ்சல் வாக்குக்குப் பதில் போலீஸ் இராணுவ வீரர்கள் முன்கூட்டியே
வாக்களிப்பது, உடற்குறையுடையவர்கள் வாக்களிக்க ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதிப்பது, வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் போது ஆட்சேபிப்பது, வேட்பு மனுவை மீட்டுக் கொள்ளும் நடைமுறை ஆகியவற்றை ரத்துச் செய்வது ஆகியவை அந்தப் புதிய விதிகளாகும்.
வாக்களிக்க விரும்புகின்றவர் தமது ஆள்காட்டி விரலில் அழியா மையைக் கொண்டு குறியிட்டுக் கொள்வது
கட்டாயமாகும். அவ்வாறு செய்ய மறுக்கின்ற வாக்காளருக்கு வாக்குச் சீட்டு கொடுக்கப்பட மாட்டாது.
தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத இராணுவ வீரர்கள், அவர்களது மனைவியர், போலீஸ்காரர்கள்
ஆகியோர் முன் கூட்டியே வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் இப்போது ஏற்பாடு செய்துள்ளது.
அந்த நடைமுறையில் மொத்தம் 273,819 வாக்காளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களில் 163,017
இராணுவத்தையும் 110,802 பேர் போலீஸ் படையையும் சார்ந்தவர்கள்.
பாதுகாப்புப் படைகளைத் தவிர குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வெளிநாடுகளில் வசிக்கும்
மலேசியர்கள் அஞ்சல் வாக்கு மூலம் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.
என்றாலும் அவர்கள் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும். நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகளில் 30 நாட்கள் மலேசியாவில் தங்கியிருக்க வேண்டும்.
தென் தாய்லாந்து, சிங்கப்பூர், புருணை, கலிமந்தான் ஆகியவற்றில் வசிக்கும் மலேசியர்களுக்கு அந்த வசதி
கிடையாது. அவர்கள் வாக்களிக்க நாடு திரும்ப வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் போது ஆட்சேபம் தெரிவிக்கும் நடைமுறையும் வேட்பு மனுவை மீட்டுக்
கொள்ளும் நடைமுறையும் ரத்து செய்யப்படுவதற்கு தேர்தல் ஆணையம் இணங்கியுள்ளது,
அற்பமான காரணங்களுக்காக ஆட்சேபம் தெரிவிக்கப்படுவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும்.
இதனிடையே உடற்குறையுடையவர்கள், வாக்களிக்க உதவியாக ஒருவரை அழைத்துச் செல்ல அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. அந்த நபர் பிரஜையாகவும் 21 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்பதே
நிபந்தனைகளாகும். அவர் வாக்காளராக பதிவு செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
நாட்டின் பொதுத் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக ஊடகவியலாளர்கள் அஞ்சல் வாக்காளர்களாக
தங்களைப் பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நிருபர்கள், படப்பிடிப்பாளர்கள்,
தொழில்நுட்பர்கள் ஆகியோரும் அடங்குவர்.
இதனிடையே தீவகற்ப மலேசியாவில் ஐந்து அரசு சாரா அமைப்புக்களும் சரவாக்கில் எட்டு அரசு சாரா
அமைப்புக்களும் சபாவில் மூன்று அரசு சாரா அமைப்புக்களும் 13வது பொதுத் தேர்தல் பார்வையாளர்களாக
நியமிக்கப்பட்டுள்ளன.
ஆர்டிஎம் என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சி வழியாக தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை
வழங்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கு சமமான வாய்ப்புக் கொடுக்க தகவல், தொடர்பு பண்பாட்டு அமைச்சு
தயாராக உள்ளது.
13வது பொதுத் தேர்தலில் அமலாக்கப்படும் மற்ற புதிய அம்சங்கள்:
10 நாட்களுக்கு குறையாத பிரச்சாரக் காலம்
வாக்களிப்பு இடத்துக்குள் நுழையும் வாக்காளர்களை வேட்பாளர்களின் பேராளர்கள் தெளிவாகப் பார்ப்பதற்கு
உதவியாக வாக்களிப்பு அறைகளில் அவர்களுக்கு உள்ள இடங்கள் மாற்றப்படும்.
வாக்காளர் பட்டியலைக் காட்சிக்கு வைக்கும் காலம் ஏழு நாட்களிலிருந்து 14 நாட்களாக அதிகரிக்கப்படும்
மக்களுக்கு அண்மைய தகவல்களை வழங்க 13வது பொதுத் தேர்தல் இணையத் தளத்தை (www.pru13.gov.my)
உருவாக்குவது.
வேட்பாளர் நியமன நாளன்று வரும் கட்சி ஆதரவாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கூடாரங்களை வழங்காது.
பெர்னாமா