இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கை: சரவணன் திருப்தி

போரினால் பாதிப்படைந்த இலங்கை தமிழர்களுக்கான நிதியின் கணக்கறிக்கையை மலேசிய தமிழ் பேரவை இன்று காலை கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எம். சரவணனிடம் சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து  கோலாலம்பூர் மாநகராட்சி தலைமையக கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சரவணன் தமிழர் பேரவையின் கணக்கறிக்கையைத்  தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

தணிக்கை செய்யப்பட்ட அவர்களது கணக்கறிக்கை முறையாக உள்ளதாகவும் அதில் தாம் திருப்தியடைவதாகவும் கூறிய அவர், அதைத்தாம் பிரதமர் இலாக்காவிடம் சமர்ப்பிக்க போவதாக கூறினார்.

இது நாள் வரை அந்த நிதியில் இருந்து ரிம 1,613,825 பட்டுவாடா செய்யப்பட்டு அதன் வழி 1,629 பெண்களை மையமாக கொண்ட தனித்து வாழும் தாய்மார்கள் குடும்பங்களும் 600 மாணவர்களும் பயன் அடைந்து வருவதாக கூறிய சரவணன், மீதமுள்ள ரிம 1,586,175 பத்திரமாக தமிழ் பேரவையின் வங்கியில் உள்ளதை உறுதிப்படுத்தினார். இதை அவர்கள் பயன்படுத்தும் காலகெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்றார்.

தமிழர் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் கணக்கறிக்கையை அதன் தலைவர் மருத்துவர் என்.ஐயங்கரன், பொருளாளர் கந்தையா சமர்ப்பித்தனர். அவர்களுடன் மருத்துவர் குணலட்சுமி, உதயசூரியன், வழக்கறிஞர் பசுபதி மற்றும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

உண்மை நிலவரத்தைக் கண்டறிய விரும்பும் பொறுப்பான பத்திரிக்கையாளர்களைத் தாங்கள் இலங்கைக்கு அனுப்ப தயாராக உள்ளதாக தமிழ் பேரவை மலேசியா பெர்ஹாட்டின் வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார்.