அன்வார்: நான் பேராக்கில் போட்டியிடப் போகிறேன்

anwarஎதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், தமது பெர்மாத்தாங் தொகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் சொந்த ஊர் என்னும் உணர்வுகள் இருந்த போதிலும் வரும் தேர்தலில் பேராக்கில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார்.

“பேராக்கில் களம் இறங்குவதற்கான என்னுடைய நோக்கத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன்,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் தமது சொந்த ஊரில் முதலில் சேதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என்பதை அவர் ஒப்புக்  கொண்டார்.

“என் வாக்காளர்களைச் சாந்தப்படுத்துவதற்காக நான் நாளை பெர்மாத்தாங் பாவ்-விற்குச் செல்கிறேன்,” எனக் குறிப்பிட்ட அவர் தமது முடிவுக்கு சிலர் வெளிப்படையாகவே ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகச் சொன்னார்.

1999ல் அன்வார், அவரது மனைவி வான் அஜிஸா வான் இஸ்மாயில் ஆகியோரது நிலைமை மிக மோசமாக இருந்த காலத்திலும் பெர்மாத்தாங் பாவ் தவிர எல்லா இடங்களிலும் தோல்வி கண்ட போதும் தாங்கள் அவர்களுடன் இருந்ததாகக் கூட சிலர் புகார் செய்துள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

“இப்போது அவர்கள் வலுவாக இருக்கின்றனர், புத்ரா ஜெயா கண்ணுக்கு எட்டிய தொலைவில் இருக்கும் போது அன்வார் தங்களைக் கைவிட்டுச் செல்வதாக அந்தத் தொகுதி மக்கள் எண்ணுகின்றனர்.”

“பேராக்கில் எங்கள் நிலமையை வலுப்படுத்துவதே எனது நோக்கமாகும். என்னுடைய பெர்மாத்தாங் நண்பர்கள் அளித்து வரும் விசுவாசமான ஆதரவை அவமரியாதை செய்வது அல்ல,” என்றார் அன்வார்.