கேலாங் பாத்தாவில் போட்டியிடுமாறு கிட் சியாங் விடுத்த சவாலை டாக்டர் மகாதீர் நிராகரித்தார்

mahaகேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் விடுத்த  சவாலை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

அதற்கு அரசியலிலிருந்து தாம் ஒய்வு பெற்று விட்டதே காரணம் எனக் கூறிய அவர் லிம்-மும் அவ்வாறு
செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“அவர் ஒய்வு பெற்று இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். அவர் 1964ம் ஆண்டு தொடக்கம் அரசியலில்  இருக்கிறார். 2003ம் ஆண்டு நான் பிரதமர் பதவியைத் துறந்து இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தேன்,” என  அவர் மேலும் சொன்னார்.

பொதுத் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இடையில் நிகழும் போட்டியாகும். தனி நபர்களுக்கு
இடையிலான போட்டி அல்ல. ஏனெனில் வெற்றி பெறும் கட்சியே அரசாங்கத்தை அமைக்க முடியும் என
மகாதீர் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவில் நிருபர்களிடம் பேசிய அவர், வேட்பாளர்கள் பிஎன் கூட்டணியில் எந்தக் கட்சியைச்
சேர்ந்தவர்களாக இருந்தாலும் பிஎன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு
அளிக்க வேண்டும் என்றும் மகாதீர் கேட்டுக் கொண்டார்.

சீனர்கள் உட்பட மக்களுடைய ஆதரவை பிஎன் மீண்டும் பெற்றுள்ளதால் 13வது பொதுத் தேர்தலில் பிஎன்
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக மகாதீர், அம்னோவை சமய நம்பிக்கையற்றது என குறிப்பிட்ட ‘Amanat (செய்தி) Haji Hadi’ -யால்
ஈர்க்கப்பட்டதால் 1988ம் ஆண்டு தம்மைக் கொல்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் முன்னாள் பாஸ் ஆயுள்
உறுப்பினர் ஜைனோன் இஸ்மாயிலைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பின் போது கிளந்தானைச் சேர்ந்த பல அரசு சாரா முஸ்லிம் அமைப்புக்களின் பேராளர்களும்
உடனிருந்தார்கள். அவற்றுள் Persatuan Minda Pondok, Ikatan Cendekiawan Islam Kelantan ஆகியவையும்
அடங்கும். அவை ஒரு காலத்தில் தீவிரமான பாஸ் ஆதரவாளர்களாக இருந்தன.

பெர்னாமா