சுபாங், மார்ச் 8- மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகன் தீடீரென வந்து புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு, 8 ஏக்கர் எங்கே? ஏன் அதை மேம்பாட்டாளருக்கு திரும்ப ஒப்படைத்தீர்கள்? அந்த நிலத்தில் 144 தொழிலாளர்களுக்கும் 144 வீடுகள் கட்டலாமே? என ஓலமிட்டு வருவதைக் குறிப்பிடுகிறேன். 1993 முதல் சைம் டார்பியுடன் உள்ள வழக்கில் 76 தொழிலாளர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதால், 144 தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு இங்கே கேள்வி எழவில்லை. எல்லா காலக்கட்டத்திலும் அந்த நிலம் சைம் டார்பிக்கே சொந்தமானது என்பதால், நிலத்தைத் திரும்ப ஒப்படைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்விவகாரத்தின் உண்மை நிலையை அறிந்திடாமல் தேவையற்ற கேள்விகளை அவர் எழுப்புவதாகவே தெரிகிறது.
வாசகர்களின் தீர்க்க முடிவுக்கு ஆரம்பக் காலக்கட்டம் முதல் உண்மை நிலவரங்களை இங்கே தொகுத்து வழங்குகிறேன் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான ஆர்.சிவராசா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான புக்கிட் ராஜா தோட்டத்தில் 76 முன்னாள் தொழிலாளர்களும் தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என்ற சைம் டார்பி நிறுவனத்தின் கட்டளைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவர்களின் போராட்டத்தில் 1993 ஆம் ஆண்டு முதல் எனது சட்ட நிறுவனமான டைம் அண்ட் காமினி அந்த 76 முன்னாள் தொழிலாளர்களைப் பிரதிநிதித்து வந்தது.
அன்று முதல் இன்றுவரை சைம் டார்பி மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தொடர்புடைய ஒரு ஜிஎல்சி சிறுவனம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். டி..மோகனின் மஇகா என்ற கட்சி மத்திய அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்பதையும் அறிய வேண்டும்.
ஏப்ரல் 1992 முதல் கட்டங்கட்டமாக சைம் டார்பி தொழிலாளர்களை வேலை நிறுத்தம் நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்தது. பின்னர் அந்த முன்னாள் தொழிலாளர்களுக்கு 25 ஆயிரம் ரிங்கிட் மதிப்புடைய மலிவு விலை அடுக்குமாடி வீடுகளை கொடுக்க முன்வந்தது. பல தொழிலாளர்கள் அதை ஏற்றுக்கொண்டு தங்களின் தோட்ட குடியிருப்பிலிருந்து வெளியேறினர். இன்னும் சிலரோ உறுதியளித்தபடி எங்களுக்கு தரை வீடு தாருங்கள் என்று பிடிவாதம் பிடித்து தோட்டக் குடியிருப்பிலிருந்து வெளியேறாமல் அங்கேயே தங்கி விட்டனர். இவர்களை வெளியேற்ற சைம் டார்பி 1993இல் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள மனு தாக்கல் செய்தது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என் உதவியை நாடி வந்தனர். பல ஆண்டுகளுக்கு அந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் தள்ளிப்போடுவதில் நான் சமாளித்து வந்துள்ளேன். தொடர்ந்து மேலும் ஒரு வெளியேற்ற முறையீட்டுக்கு 2005இல் சைம் டார்பி நிறுவனம் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. மறுபடியும் எனது சட்ட நிறுவனம் தொழிலாளர்களுக்கும் வாதாடி வெளியேற்றம் நடைபெறாமல் தள்ளிப்போடப்பட்டது. இந்த வழக்குகளில் அனைத்திலும் 76 தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் நான் பிரதிநிதித்து வந்துள்ளேன்.
இவ்வளவும் நடந்துகொண்டிருந்த காலக்கட்டத்தில் டி.மோகனின் மஇகாவோ அவர்களின் பெரும் தலைவர்களோ மத்திய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தும் தொழிலாளர்களுக்கு எதிராக சைம் டார்பி நிறுவனம் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறை அடாவடித்தனத்தை நிறுத்திவைக்க யாரும் எதுவுமே செய்யவில்லை. மாறாக, ஏழை எளிய இந்திய தோட்டப்பாட்டாளிகளின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதைப் பார்த்து சந்தோசப்பட்டுக்கொண்டிருந்தனர்.
உச்சகட்டமாக 2007இல் தொழிலாளர்கள் வலிக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு சைம் டார்பி நிறுவனம் மேலும் கடுமையான சூழ்ச்சிகளை கையாளத் தொடங்கியது. அவ்விடம் மக்கள் வசிக்கவே முடியாதபடி சுற்று முற்றிலும் உள்ள காலி வீடுகளை தரைமட்டமாக்கி, நீர் மின்சாரத்தை துண்டித்து தொழிலாளர்கள் தங்கியிருந்த இடத்தை ஒரு போர் மண்டல இடம்போல் ஆக்கிவிட்டனர்.
இப்பவும் டி.மோகனின் கட்சியோ மத்திய அரசாங்க அமைச்சரவையிலுள்ள அவர்களின் பிரதிநிதிகளோ இந்த அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் ஏழை இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவோ எவரும் கண்டுகொண்டதாதத் தெரியவில்லை. அவர்களால் எதுவுமே செய்ய முடியாத இக்கட்டான நிலைமையோ என்று கூட தோன்றுகிறது. அது எனக்குத் தெரியாது. ஆனால், யாருமே சைம் டார்பியின் அடாவடித்தனத்தை நிறுத்துவதற்கு முன்வரவில்லை என்பது மட்டும் உண்மை. அந்த முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் மறுபடியும் என் உதவியை நாடியபோது, அவர்களுக்காக வழக்கு தொடர்ந்து சைம் டார்பியின் கொட்டத்தை அடக்குவதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு ஒன்றை பெற்றுத்தந்தேன். அதன்பின் தொழிலாளர்களை வெளியேற்றும் விரோதமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஏழை தோட்டத் தொழிலாளர்கள் வஞ்சிக்கக்கூடாது. அவர்கள் குடியிருக்க முறையான வீட்டுடைமை தரப்பட வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற பொது நலன் கருதியே அவர்களுக்காக போராடி வருகிறேன். மற்றவர்களுக்கும் இதுபோன்ற சேவையை நான் வழங்கிவருகிறேன்.
மார்ச் 2008இல் பக்கத்தான் ராக்யாட் சிலாங்கூரை கைப்பற்றியிருக்கவில்லை என்றால், இன்று இந்த தோட்டத் தொழிலாளர்களின் வீடுகள் தரைமட்டமாகி இருக்கும். நிச்சயமாக தங்குவதற்கு வீடில்லாமல் நட்டாற்றில் தவிக்க விட்டிருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன்.
சிலாங்கூரில் ஆட்சி மாற்றத்தினால், சைம் டார்பியின் பிடிவாத போக்கு சற்று தளர்ந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக டாக்டர் சேவியர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அது வெற்றிகரமாகவும் முடிந்தது. 20 x 70 அளவிலான தரை வீடுகள் 70 ஆயிரம் வெள்ளி விலையில் முன்னாள் தொழிலாளர்கள் இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொண்டனர். 2014இல் கட்டி முடிக்கப்பட்டதும் அதன் சந்தை விலை 250,000 வெள்ளிக்கு உயரும் என மதிப்பிடப்படுகிறது. இந்தக் குடியிருப்பில் கோயிலும் ஒரு மண்டபமும் கட்டப்படும். வீட்டின் விலையையும் அதன் மதிப்பையும் கொண்டு பார்க்கையில், இதுவே சிறந்ததொரு உடன்பாடு எனக் கருதியே முன்னாள் தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுகொண்டனர் என்று கருதலாம். 76 தொழிலாளர்களும் மார்ச் 1, 2009இல் இந்த வீடுகளின் வடிவமைப்பும் விபரங்களும் அடங்கிய கடிதத்தை எழுத்து வடிவில் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலம் வழங்க உறுதியளிக்கப்பட்டது என தவறான அறிக்கையை விட்டு வந்த மதியழகனும் 76 தொழிலாளர்களில் ஒருவராவார். எந்தக் காலக்கட்டத்திலும் முன்னாள் தோட்ட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்ற உறுதி, பக்கத்தான் ரக்யாட்டின் சிலாங்கூர் அரசாங்கம் கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தையின் போது, வீடு கட்டுவதற்கு சைம் டார்பிக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.
மார்ச் 1, 2009 ஒப்பந்த கடிதத்திலும் கூட குடியிருப்பில் 20 x 70 அளவிலான தரை வீடுகள் பற்றியே குறிப்பிடுகிறது. அப்போது மதியழகன் உட்பட எந்த தொழிலாளியும் 15 ஏக்கர் நிலம் பற்றிய கோரிக்கையை எழுப்பியது கிடையாது. காரணம் அவர்களிடத்தில் அப்படியொரு கோரிக்கையே இருந்ததில்லை. அவர்களின் கோரிக்கை தரை வீடுகளுக்கு மட்டுமே. இன்று அவர்களின் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 1993 முதல் வழக்கில் வாதாடி வந்துள்ளோம். 76 வீடுகளும், கோயில், மண்டபமும் இந்தக் குடியிருப்பில் எழுப்புவதற்கு சைம் டார்பியின் அந்த 15 ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய பாதியே தேவைப்படும். மீதமுள்ள நிலத்தை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பது நில உரிமையாளரான சைம் டார்பியை பொறுத்தது.
அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி டி.மோகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஜிஎல்சி நிறுவனமான சைம் டார்பியை மீதமுள்ள 8 ஏக்கர் நிலத்தில் என்ன செய்யலாம் என சுட்டிக்காட்டவும் சொல்லவும் அவரின் மஇகாவுக்கும் அம்னோவுக்கும் அதிகாரம் உண்டு என்பதை டி.மோகனுக்கு புரிந்துகொள்ள முடியவில்லையே. சைம் டார்பி மீது சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதிகாரம் செலுத்த இயலாது. டி.மோகன் தனது கோரிக்கைகளை பிரதமரிடமும் தனது கட்சித் தலைவர்களிடமும் முன்வைக்க வேண்டும். நான் 76 முன்னாள் தொழிலாளர்கள், குடும்பத்தினர்களுக்கு மட்டுமே வாதாடி அவர்களுக்கு இந்த 70 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான வீடுகளை பெற்றுத்தந்துள்ளேன். 144 தொழிலாளர்கள், 144 வீடுகள் என்ற கணக்கை டி.மோகன் எங்கிருந்து பெற்றுள்ளார் என்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் சைம் டார்பியின்படி 1993 முதல் 2008 வரை 25 ஆயிரம் வெள்ளி குறைந்த விலை அடுக்குமாடி வீடுகளை முன்னாள் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு வெலியேறியவர்கள் மறுபடியும் இப்போது தூண்டுதலால் 70 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 76 தரை வீடுகளைப்போல் வேண்டும் என்று கோரிக்கை விட்டால் அது சரியாகாது.
இந்த 76 முன்னாள் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் 1993 முதல் இன்றுவரை சைம் டார்பிக்கு எதிர்ப்பாக நீதிமன்றத்தில் போராடியவர்கள். நடப்பு தேமு-அம்னோ-மஇகா அரசாங்கத்தால் அவர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்டு கொடூரமான தொல்லைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளானவர்கள். அந்த 76 குடும்பங்களுக்கு மட்டுமே அந்தப் புதிய வீடுகளுக்கு தகுதியானவர்கள்.
1993 முதல் 2008 வரை இந்த 76 புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்கள் ஏன் அடக்குமுறையில் வஞ்சிக்கப்பட்டு சித்ரவதைக்குட்பட்டார்கள் என்பதை டி.மோகன் தமது சொந்த கட்சித் தலைவர்களிடமும் தேமு கூட்டணித் தலைவர்களிடமும் கேள்வி கேட்க வேண்டும். மாறாக இப்போது எதுவும் நடவாததுபோல் பாசாங்கு செய்ய வேண்டாம் என்று சிவராசா விளக்கம் அளித்தார்.
நன்றி : தினக்குரல், 8.3.2013.