அன்வார் பேராக் வரட்டும், ‘புதைத்து விடுகிறேன்’; ஜாஹிட் சூளுரை

jahidபேராக்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிட வந்தால் அவர் எந்த இடத்திலும் வெற்றிபெற முடியாதபடி செய்வோம் என்று சூளுரைத்துள்ளார் அம்மாநில  அம்னோ தலைவர் முகம்மட் ஜாஹிட் ஹமிடி.

“அவரது தோல்வியை உறுதி செய்வோம்”, என்றாரவர். இன்று புத்ரா வாணிக மையத்தில் பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின் ஜாஹிட் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்படியே அன்வார் பேராக் வந்தாலும் அவர் பிஎன் வென்ற பாகான் டத்தோ போன்ற இடங்களில் போட்டியிட துணியமாட்டார், பக்காத்தான் வசமுள்ள இடங்களுக்குத்தான் செல்வார் என்றும் ஜாஹிட்  கூறினார்.

anwarபேராக்கில் பக்காத்தானின் போராட்டத்துக்குத் தலைமையேற்கும் அன்வாரின் முடிவை எண்ணி அம்னோ அஞ்சவில்லை.

“லிம் கிட் சியாங் ஜோகூர் போவதை நினைத்து அஞ்சாததுபோல் இதைக் கண்டும் நாங்கள் அஞ்சவில்லை”, என்றாரவர்.

ஒரு காலத்தில் வெள்ளி மாநிலம் என்றழைக்கப்பட்ட பேராக்கில் பிஎன் வாய்ப்புப் பற்றி வினவியதற்கு வெற்றிபெற முடியும் என்று ஜாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்.

“ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குக் கூடுதல் முயற்சி தேவைப்படும்”, என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

அன்வார், பேராக்கில் போட்டியிடப்போவதாக நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பெர்மாத்தாங் பாவ் சொந்த ஊர் என்றபோதிலும் தம் ஆதரவாளர்கள் அதைவிட்டுச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் பேராக் செல்ல முடிவு செய்திருப்பதாக அவர் சொன்னார்.

பேராக்கைத் திரும்பக் கைப்பற்றும் பக்காத்தான் முயற்சிக்குத் தாம் தலைமையேற்பது அவசியம் என்பதால்தான் அம்மாநிலம் செல்வதாகவும் மற்றபடி ஆதரவாளர்களைக் கைவிட்டுச் செல்லவில்லை என்றும் அவர் சொன்னார். இதைத் தம் ஆதரவாளர்களிடம் விளக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே,  பிஎன் உச்சமன்றக் கூட்டத்துக்குத் தலைமையேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், அன்வாரின்  முடிவுக்கு  அவர் அவரின் ஆதரவாளர்களைக் கைவிட்டுச் செல்கிறார் என்பதுதான் பொருள் என்றார்.

“அரசியலில் நம் ஆதரவாளர்களுக்கு விசுவாசமாக இருத்தல் அவசியம். நான் ஒருகாலும் பெக்கானை விட்டுச் செல்ல மாட்டேன்”, என்றாரவர்.