கேலாங் பாத்தாவில் கனியைக் களமிறக்குவது அம்னோவின் பயத்தைக் காண்பிக்கிறது

1kitஜோகூர் அம்னோ, கேலாங் பாத்தாவில் லிம் கிட் சியாங் போட்டியிடுவதை எண்ணிக்  கலக்கம் அடைந்திருக்கிறது.

“அதனால்தான் அவர்களின் தலைவரையே அங்கு களமிறக்க முடிவு செய்துள்ளனர்”, என டிஏபி தேசிய விளம்பரப் பிரிவு செயலாளர் டோனி புவா கூறினார்.

1kit puaஜோகூர் அம்னோ அதன் தலைவர் கனி ஒத்மானை கேலாங் பாத்தாவில் களமிறக்கப் பரிந்துரைத்திருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது புவா இவ்வாறு கூறினார்.

கேலாங் பாத்தா டிஏபிக்கு பாதுகாப்பான தொகுதியாக என்றும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொண்ட அவர், லிம் கிட் சியாங்கை அங்கு அனுப்பியதே  ஆபத்தான முடிவுதான் என்றார்.

ஆனால், அம்மாநில பிஎன் ஆட்சியைக் கவிழ்க்க பக்காத்தான் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதால் இந்தத் துணிச்சலான முயற்சியும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

கேலாங் பாத்தா பிஎன் கோட்டையாக திகழும் ஒரு தொகுதி. அங்கு கனி களமிறக்கப்படுவது லிம்முக்கு ஆபத்தாக முடியலாம் என்பதையும் புவா ஒப்புக்கொண்டார்.

அதே வேளை, அம்னோ/பிஎன் அப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றால், அது லிம்மை ஒரு மிரட்டலாக நினைத்து அஞ்சுகிறது என்பதும் புலனாகிறது.

அது, கனியை ,மாநிலத்தைவிட்டுக் கிளப்பும் ஒரு உத்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுவது பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவர் மந்திரி புசார் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று கூறுவதால் அவர் நாடாளுமன்றம் செல்லும் திட்டமும் இருக்கலாம் என்றாரவர்.

1ganiகனி (இடம்) நீண்டகாலமாக மந்திரி புசாராக இருந்து வருபவர். அவரைவிடவும் நீண்ட காலம் மந்திரி புசாராக இருப்பவர் என்று பார்த்தால் அது சரவாக்கின் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹ்முட்டாகத்தான் இருக்க வேண்டும்.

பிஎன்னின் இரும்புக் கோட்டை என்று கருதப்படும் ஜோகூருக்குள் ஊடுருவும் பக்காத்தான் திட்டத்துக்குத் தலைமையேற்று லிம், தமக்குப் பாதுகாப்பான தொகுதியான ஈப்போ தீமோரைவிட்டு ஜோகூருக்குச் செல்லத் தீர்மானித்துள்ளார். அவர் மட்டுமல்லாது அவருடன் பல டிஏபி தலைவர்களும் பாஸ் தலைவர்களும்கூட அங்கு களமிறங்க முடிவு செய்துள்ளனர்.

தென் ஜோகூரில் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என உறுதியாக நம்பும் லிம்,மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இன்னும் கூடுதல் இடங்களை வென்று ஜோகூரில் பக்காத்தான் ஆட்சியை அமைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கிறார்.

லிம்மைப் போலவே, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் தம் தொகுதியான பெர்மாத்தாங் பாவைவிட்டு பேராக்கைக் கைப்பற்றும் பக்காத்தான் முயற்சிக்குத் தலைமையேற்று அங்கு செல்ல முடிவு செய்துள்ளார்.