இசி புதன்கிழமை கூடி வேட்புமனு, வாக்களிப்பு தேதிகளை முடிவு செய்யும்

1ecதேர்தல் ஆணையம் (இசி) புதன்கிழமை சிறப்புக்கூட்டம் நடத்தி 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையும் வாக்களிப்பு நாளையும் முடிவு செய்யும்.

புத்ரா ஜெயாவில் உள்ள இசி தலைமையகத்தில் நடைபெறவுள்ள அக்கூட்டத்தில், முன்கூட்டிய வாக்களிப்புக்கான நாள், பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஆகியவை பற்றியும் முடிவு செய்யப்படும் என இசி செயலாளர் கமருடின் முகம்மட் பாரியா கூறினார்.

பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவா’ட்சாம் ஷா, ஏப்ரல் 3-இல் மக்களவையைக் கலைத்தார் என்ற தகவல் இசி-க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“சரவாக் தவிர்த்து மற்ற சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட அறிவிக்கைகளும் இசி-க்கு வந்து கிடைத்துள்ளன”,என்றாரவர். சர்வாக் அதன் சட்டமன்றத் தேர்தலை 2011-இல் நடத்தியது.

மக்களவையும் சட்டமன்றங்களும் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தலை நடத்துவது இசி-இன் பொறுப்பாகும் என கமருடின் தெரிவித்தார்.

-பெர்னாமா