அந்நியர்கள் வாக்களிப்பதை ஏபியூ (ABU) ‘அமைதியாக’ நிறுத்த முயலும்

abuமலேசிய அடையாளக் கார்டுகளை வைத்துள்ள அந்நியர்களை வாக்களிப்பதிலிருந்து நிறுத்துவதற்கு  திட்டமிட்டுள்ளதை ‘Asalkan Bukan Umno’ (அம்னோவைத் தவிர எதுவாக இருந்தாலும் பரவாயில்லை)  எனப்படும் இயக்கம் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அது ‘அமைதியான’ முறையில் மேற்கொள்ளப்படும் என  அது வலியுறுத்தியது.

வாக்களிக்க வேண்டாம் என அந்நியர்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் அண்மையில் விநியோகம் செய்யப்பட்டன. அதற்கு பின்னர் யூ டியூப் இணையத் தளத்திலும் ஒரு வீடியோ சேர்க்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து ஏபியூ-வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.abu1

“அந்த ‘எச்சரிக்கை’ கடிதத்தின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். 13வது பொதுத் தேர்தலில் அந்நியர்கள்  வாக்களிப்பதைத் தடுப்பதாகும். இல்லை என்றால் அவர்கள் மக்களுக்கு கோபத்திற்கு இலக்காக நேரிடும்.” என  ஏபியூ தொண்டரான ஜேசன் சஞ்சீவ் கணேசன் இன்று காலை நிருபர்களிடம் கூறினார்.

“எங்கள் எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மையை பாதுகாக்க நாடு முழுவதும் எங்கள் Team Tahan (ABU Halang Asign Ngundi) குழுக்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.”

என்றாலும் அந்த நடவடிக்கையை வெறுப்பைத் தூண்டும் நடவடிக்கையாகக் கருதக் கூடாது என ஏபியூ தலைவர் ஹாரிஸ் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

“மக்கள் உரிமையை எந்தத் தரப்பும் மீறாமல் இருப்பதை உறுதி செய்வதே” ஏபியூ-வின் விருப்பம் என அவர் குறிப்பிட்டார்.

“ஏபியூ யார் மீதும் வன்முறையைக் காட்ட எண்ணவில்லை. எங்கள் முயற்சி அமைதியானது,” என்றார் ஹாரிஸ்.

ABU2‘மரணமடையவும் தயார்’

“வாக்குகளுக்காக அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்நியர்கள், லஹாட் டத்துவில்  ஊடுருவியவர்களைப் போன்றவர்களே. அந்த அந்நியர்கள், மலேசியர்களுடைய உரிமைகளை ‘மீறுவதற்காக’ அடையாளக் கார்டுகள் என்ற ‘ஆயுதங்களுடன்’ உள்ளனர்.”

“லஹாட் டத்துவில் பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெறுப்பைத் தூண்டுகின்றனவா ?” என்று ஹாரிஸ் வினவினார்.

கடந்த இரண்டு மாதங்களாக தஹான் குழுக்கள், தேர்தல் நாளன்று வாக்களிக்க வர வேண்டாம் என  எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை நாடு முழுவதும் அந்நியர்களுக்கு விநியோகம் செய்து வருவதாக ஏபியூ  அமைப்பு கூறியது.

‘எச்சரிக்கை’ என்னும் தலைப்பைக் கொண்ட அந்த பிரசுரங்கள், இந்தோனிசிய, பர்மிய, உருது, வங்காள மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.

இதனிடையே யூடியூப்பில் சேர்க்கப்பட்ட ஒரு வீடியோவில் ஏபியூ எச்சரிக்கையை கடுமையாக எடுத்துக்  கொள்ளுமாறும் இல்லை என்றால் ‘பதிலடி’ கொடுக்கப்படும் என்றும் ஹாரிஸே நேரடியாக எச்சரித்துள்ளார்.

“மை கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்நியர்களே, இதனை செவிமடுங்கள். 13வது பொதுத் தேர்தல் நிகழும்  நாளன்று வாக்குச் சாவடிகளிலிருந்து ஒதுங்கியிருங்கள். தயவு செய்து இந்த எச்சரிக்கையைக் கடுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்.”

“தேர்தல் நாளன்று எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஏபியூ குழுக்கள் காவல் சுற்றுப் பணியை மேற்கொள்ளும்.  அந்த எச்சரிக்கையை மீற எண்ணம் கொண்டுள்ள அந்நியர்களை அவை கவனித்துக் கொள்ளும்,” என அவர்  அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

பக்காத்தானுக்கு 200 நாள் காலக் கெடு

எழு நிமிடங்களுக்கு ஒடும் அந்த வீடியோவில் பல்வேறு கட்சிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று ஏமாற்று வேலைகளைத் தடுக்க ஏபியூ “எந்த அளவுக்கும் எப்படியும் செல்லும்” என்றும் அதற்காக தாங்கள் “மரணமடையவும் தயார்” என்றும் ஹாரிஸ், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் கூறியுள்ளார்.

பக்காத்தான் ராக்யாட்டும் விடுபடவில்லை. அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைக்குமானால் மாற்றங்களை அமலாக்குவதற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 200 நாள் கால  அவகாசத்தை ஏபியூ வழங்குவதாக ஹாரிஸ் சொன்னார்.

“நாங்கள் இப்போது கொடுக்கும் 200 நாட்களில் சீர்திருத்தங்களை நீங்கள் (பக்காத்தான்) செய்யா விட்டால் அடுத்து நீங்கள் மக்களை சாலைகளில் காண்பீர்கள் என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.”

அம்னோ/பிஎன்  தர முன்வரும் வெகுமதிகளுக்கு ஆசைப்பட்டு “தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளுக்குத் துரோகம் செய்யும்” பிஎன் அல்லாத வேட்பாளர்களுக்கும் ஹாரிஸ் அறிவுரை கூறியுள்ளார். ‘உங்களால் முடிந்ததை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஒடி விடுங்கள்’ என்பதே அந்த அறிவுரையாகும்.

“நீங்கள் அப்படிப் போகா விட்டால் என்னை நம்புங்கள். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம். அதனால் ஏற்படும் காலி இடத்தை நிரப்ப, கூடிய விரைவில் இடைத் தேர்தல் நிகழ்வதையும் நாங்கள் உறுதி செய்வோம்,”  என்றார் அவர்.

ஆனால் அத்தகைய வேட்பாளர்களை பிடித்தால் என்ன செய்யப்படும் என்பதை அவர் விவரமாகக் கூறவில்லை.

TAGS: