வரும் பொதுத் தேர்தலில் முக்கியமான போர்க்களங்கள் எனக் கருதப்படும் ஜோகூர், சபா, சரவாக் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு மீதான பேச்சுக்களை விரைவில் முடித்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் எண்ணியுள்ளது.
“அந்த மூன்று மாநிலங்களிலும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகள் சம்பந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட
கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன,” என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நேற்று கட்சித் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
“பெந்தோங், கேலாங் பாத்தாங் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டதே (அங்கு பிகேஆர், டிஏபி-க்கு வழி
விட்டுள்ளது) அதற்குக் காரணம் ஆகும். நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். ஆகவே தொகுதிகளை மாற்றிக் கொள்வது மீது நாங்கள் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளோம்,” என்றார் அவர்.
இட ஒதுக்கீடு தொடர்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி, பாஸ் தேர்தல் இயக்குநர் டாக்டர் ஹட்டா ராம்லி, டிஏபி துணைத் தலைவர் தான் கோக் வாய் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 222 இடங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்கள் ஜோகூர், சபா, சரவாக்
ஆகியவற்றில் இருப்பதால் அவை முக்கியமான போர்க்களப் பகுதிகள் என பக்காத்தான் கருதுகிறது.
அந்த மாநிலங்கள் புத்ராஜெயாவை எந்தக் கூட்டணி ஆளப் போகின்றது என்பதை நிர்ணயிக்கும் என்றும் அது எண்ணுகின்றது.
மற்ற மாநிலங்களைப் பொறுத்த வரையில் இட ஒதுக்கீடுகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாக அஸ்மின்
சொன்னார்.
ஜோகூர், சபா, சரவாக் ஆகியவற்றுக்கான புதிய யோசனைகள் அங்கீகாரத்துக்காக பக்காத்தான் உயர்
தலைமைத்துவத்திற்குச் சமர்பிக்கப்படும் என்றார் அவர்.
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் திங்கட்கிழமையன்று சந்தித்து அதனை முடிவு செய்வார்கள்.
ஜோகூரில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே இன்னும் முடிவு
செய்யப்படவில்லை என்றும் அஸ்மின் தெரிவித்தார்.
அவர் அந்த நாடாளுமன்றத் தொகுதியைக் குறிப்பிடவில்லை என்றாலும் பிகேஆர் டிஏபி-யிடம் ஒப்படைத்த கேலாங் பாத்தா தொகுதிக்கு ஈடாக பிகேஆர் கோரும் சிகாமாட் தொகுதியே அது என கருதப்படுகின்றது.