பிரதமர்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம், மலாய்க்காரர்கள் பக்காத்தானுக்கே வாக்களிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். பக்காத்தானை வலுப்படுத்துவதால் பிஎன் தேர்தலில் வென்றாலும்கூட அவர்கள் கூடுதல் நன்மை அடைவார்கள் என்றாரவர்.
நேற்று தம் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ஜைட், வாக்காளர்களில் பெரும்பான்மையோரான மலாய்க்காரர்கள் இந்தத் தடவை மாற்றரசுக் கட்சிக்கு அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“ஒரு புதிய அரசாங்கம் அமைந்தால்தான் இப்போதுள்ளதையும் அதையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அம்னோ/பிஎன்னைத் தவிர்த்து வேறு எதுவாலும் ஆள முடியாது, உங்களைப் பாதுகாக்க முடியாது என்றுதான் இதுவரை கூறப்பட்டு வந்துள்ளது.
“அதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? பக்காத்தானுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்காமல் அது அம்னோவைவிட மோசமானதா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?”, என்றவர் வினவினார்.
பக்காத்தான் வலுவாக இருப்பதால்தான் மக்களுக்கு ரொக்க அன்பளிப்புகள், பலவேறு சலுகைத் திட்டங்கள் ஆகியவை கிடைத்தன. 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வென்றாலும்கூட பக்காத்தான் வலுவுடன் இருந்தால் மக்கள்தான் நன்மை அடைவர்.
“பக்காத்தான் பலவீனமாக இருந்தால் பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்1, பிரிம் 2) கிடைத்திருக்காது. எனவே, பிஎன்னிடமிருந்து கூடுதல் நன்மை பெற வேண்டுமானால் பக்காத்தானுக்கு வாக்களிப்பதே நல்லது. வாக்கின் மகிமை உணர்ந்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்”, என்று ஜைட் மலாய் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பாஸை உங்கள் ‘பாதுக்காப்பாளராக’ ஏற்றுக்கொள்ளுங்கள்
மலாய்க்காரர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டு பாஸுக்கு ஆதரவு கொடுத்து அதைத் தங்கள் ‘பாதுகாப்பாளராக’ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாரவர்.
“பாஸ், அம்னோவைப்போல் ஒரு மலாய்க் கட்சிதான். ஆனால், நாட்டை ஆளும் அதிகாரம் இதுவரை அதற்குக் கொடுக்கப்பட்டதில்லை.
“அம்னோவுக்கு 50ஆண்டுகள் ஆளும் அதிகாரத்தை அளித்த மலாய்க்காரர்கள் அந்த வாய்ப்பை ஐந்தாண்டுகளுக்காவது (பிகேஆர், டிஏபியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள) பாஸுக்குக் கொடுக்கக்கூடாதா.
“பாஸ் நன்றாக ஆட்சி செய்யவில்லை என்றால், மக்கள் அம்னோவிடமே திரும்பிச் செல்லலாம்”.
மலாய்க்காரர்களை இப்போதைய தலைவர்களுக்கு எதிராக திரும்பச் செய்வது எளிதல்ல என்பதையும் ஜைட் ஒப்புக்கொண்டார்.
பிஎன்னும் அரசாங்கமும் ஒன்றுதான். பிஎன் தலைவர்களால்தான் அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நன்மைகளை அவர்களுக்குப் பெற்றுத் தர முடியும் என்றெல்லாம் மலாய்க்காரர்களிடம் கூறப்படும்.
“வாக்குகளுக்குக் கைமாறாக ரொக்கப் பணம், கூடுதல்சம்பளம் எல்லாம் கொடுக்கிறார்களே, சொந்த பணத்திலிருந்தா கொடுக்கிறார்கள். அது மக்களின் பணம். தலைவர்கள் வாக்குகளுக்காக கையூட்டு வழங்குவது தப்பு.
“அவர்கள் உங்களிடம் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. பணம் கொடுக்கிறார்களா, வாங்கி வைத்துக்கொண்டு நீங்கள் விரும்பும் தலைவருக்கு அல்லது கட்சிக்கு வாக்களியுங்கள்.
“இன்னும் சொல்லப்போனால், மாற்றரசுக்கட்சிக்கு வாக்களித்தீர்களானால் அடுத்த ஆண்டு பிஎன் கூடுதல் பணம் கொடுக்க வேண்டி இருக்கும். ஆக எப்படிப் பார்த்தாலும் மாற்றரசுக் கட்சிக்கு வாக்களிப்பதுதான் உங்களுக்கு வெற்றியாக அமையும்”, என்று ஜைட் தம் வலைப்பதிவில் கூறியுள்ளார்.