டிஏபி-இன் சிலாங்கூர்/ கேஎல் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்படலாம்

1dapஎதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-இன் சிலாங்கூர்/ கேஎல் வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் நிகழலாம் எனத் தெரிகிறது. சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரேசா கொக் அவரின் தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்கும் சாத்தியம் உள்ளது.

கொக், சீ பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர். 1999-இலிருந்து அந்தத் தொகுதியை அவர்  வைத்துள்ளார்.  அவர், 2008-இல், சிலாங்கூரில் கின்ராரா சட்டமன்றத் தொகுதியையும் வென்றார்.

வரும் தேர்தலில் சிலாங்கூரில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கொக் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

1dap1கொக், கோலாலும்பூரில் இருப்பதையே விரும்புகிறார்.  ஆனால், கட்சித் தலைமையின் நினைப்பு வேறு வகையாக இருப்பதுபோல் தெரிகிறது.

கொக் கோலாலும்பூர் இடத்தைக் காலி செய்தால் கல்வியாளர் ஒங் கியான் மிங் அந்த இடத்தில் நிறுத்தப்படலாம்.

ஒங், வாக்காளர் பட்டியலை அலசி ஆராய்ந்து அதில் உள்ள பல முறைகேடுகளை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்றப்படுவர்? 

டிஏபி-இன் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கழட்டி விடப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

1dap ronnieஒருவர், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியு (வலம்). கிள்ளான், பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினரான இவர் சில சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர்.

அவரின் இடத்தில் பெட்டாலிங் ஜெயா கவுன்சிலர் தியு வே கெங் போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது.

கடந்த  ஆண்டு சிலாங்கூர் டிஏபி இளைஞர் தலைவர் போட்டியில் தோல்வியுற்ற தெராதாய் உறுப்பினர் ஜெனிஸ் லீயும் தூக்கப்படுவார் எனத் தெரிகிறது.

கொக்கைப் பொறுத்தவரை சீ பூத்தே தொகுதியிலிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

“கட்சி, இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு கூறினால் நான் சீ பூத்தேயைத்தான் தெரிவு செய்வேன். இதைத் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவாக உணர்த்தி இருக்கிறேன்”, என்று மலேசியாகினியுடனான தொலைபேசி நேர்காணலில் அவர் கூறினார்.

ஜெனிஸ் லீய்க்கு அவரின் பெயர் பட்டியலில் இல்லை என்பது தெரியவில்லை. கட்சி இன்னும் அதை அவருக்குத் தெரியப்படுத்தவில்லை.

மலேசியாகினி ரோனி லியுவைத் தொடர்புகொள்ள முனைந்தது. ஆனல், தொடர்பு கிடைக்கவில்லை.