பக்காத்தான் தலைவர்களின் சொத்துக்கள் தொடர்பில் இரண்டு இரகசியங்களை அம்பலப்படுத்தப்போவதாகக் கூறிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, அவற்றைக் கேட்டு அதன் ஆதரவாளர்கள் கட்சிமீதுள்ள நம்பிக்கையை இழப்பர் என்றும் நம்புகிறார்.
இதைத் தெரிவித்த அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா, வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளுக்குப் பின்னர் இப்ராகிம் அவ்வாறு செய்வார் என்று கூறிற்று. ஆனால், அதற்குமுன் அவர், பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்து அவரது அனுமதியைப் பெறுவார்.
“இதற்குமேல் எதுவும் தெரிவிப்பதற்கில்லை”, என்றாரவர்.
“அவற்றை அம்பலப்படுத்துவதால் பல தரப்பினர் அதிர்ச்சி அடைவர். குறிப்பாக, கிளந்தான் மக்கள். மாற்றரசுக்கட்சி தலைவர்கள் சிலரின் சொத்துக்கள் பற்றிய இரகசியங்கள் அவை”, என்றவர் கூறியதாக அந்நாளேடு அறிவித்துள்ளது.
பக்காத்தான் ரக்யாட்டின் உள்சர்ச்சை குறித்து பல தகவல்களை அறிந்து வைத்திருப்பதாகவும் அந்தச் சுயேச்சை பாசிர் மாஸ் எம்பி கூறிக்கொண்டார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் எது என்பது இன்னும் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் ஏப்ரல் 10-இல்தான் அதைத் தீர்மானிக்கும்.