முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு, ‘வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்’ என்னும் விவாகரம் தொடர்பில் கட்சித் தலைவர் ஜி பழினிவேல் மீதும் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் மீதும் அவர் ஆத்திரமடைந்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்தன்று-புதன் கிழமை- சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதிக்கு தாம் ‘வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்’ எனத் தாம், நிருபர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த போது கூறியதை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு விட்டதாக அவர் கருதுகிறார்.
சாமிவேலு தேர்தலில் போட்டியிட மாட்டார் என பழனிவேல் விடுத்த அறிக்கைக்கு பதில் அளித்த சாமிவேலு, 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தாம் தெரிவு செய்யப்பட வேண்டும் என பழனிவேலிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை எனச் சொன்னார்.
“சபா, லஹாட் டத்துவில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு புக்கிட் அமானில் நேற்று நன்கொடை அளித்த போது நடத்திய நிருபர்கள் சந்திப்பில் விடுக்கப்பட்ட என் அறிக்கையை பழனிவேலும் சுப்ரமணியமும் தவறாக புரிந்து கொண்டு விட்டனர்.”
“நான் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை என நான் நிருபர்களிடம் சொன்னது உண்மை தான். ஆனால் நான் மீண்டும் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவதற்கு விரும்புகிறேன் என பழனிவேலிடம் வேண்டுகோள் விடுத்ததாக அர்த்தமாகாது,” என சாமிவேலு இன்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
அவர்களது அறிக்கைகள் மீது தாம் வருத்தமடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அறிக்கைகள் தமது உண்மையான நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றார்.
“அவர்கள் (பழனிவேலும் சுப்ரமணியமும்) வாயைத் திறப்பதற்கு ( shooting off their mouth) முன்னர் அந்த ஊடக (புக்கிட் அமான்) சந்திப்பில் என்ன நடந்தது என்பது பற்றி அறிந்து கொள்ள என்னுடன் பேசியிருக்க வேண்டும்.”
‘முந்திரிக் கொட்டையை’ (‘jumping the gun’) போல நடந்து கொண்ட அவர்கள் இருவரும் அரசியலில் முதிர்ச்சியைக் காட்டவில்லை,” என்றார் சாமிவேலு.
“நான் மஇகா தலைவராக இருந்த போது அந்த இருவருக்கும் (பழனிவேலு, சுப்ரமணியம்) கட்சியில் அரசியல் போராட்டங்களை நடத்தியுள்ளேன்.”
“நான் அவர்களுக்காக போராடிய அரசியல் போரட்டத்தினால் தான், தாங்கள் இன்றைய இடத்தில் இருப்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்,” என்றும் சாமிவேலு சொன்னார்.
“நஜிப் என் மீது நம்பிக்கை வைத்து சுங்கை சிப்புட்-டுக்கான பிஎன் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். அந்தத் தொகுதிக்கு யார் வேட்பாளராக இருந்தாலும் அந்த இடத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதை நான் உறுதி செய்வேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“நஜிப் என்னிடம் ஒப்படைத்த பணியை முடிப்பதற்கு நான் தொடர்ந்து சுங்கை சிப்புட்டில் வேலை செய்வேன்,” என்றும் சாமிவேலு கூறினார்.
1974ம் ஆண்டு தொடக்கம் மூன்று தசாப்தங்களுக்கு சாமிவேலு சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். ஆனால் 2008ம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் பிஎஸ்எம் என்ற மலேசியச் சோஷலிசக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜிடம் 1,821 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
-பெர்னாமா