Global Witness வீடியோ தகவல் தொடர்பில் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி துறக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோரவேண்டும்.
இல்லை என்றால் தனது கடமைகளைச் செய்யத் தவறியதற்காக அந்த ஆணையத்தை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் கலைத்து விடுவது நல்லது என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.
“அந்த வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளித்து ஒத்துழைப்பதற்குப் பதில் எம்ஏசிசி-யை
தாயிப் தாக்கிப் பேசியுள்ளார்.”
“தாயிப் பதவி துறக்கா விட்டாலும் அல்லது அத்தகைய அவமானத்தைத் தரும் கருத்துக்களுக்குத்
தண்டிக்கப்படாமல் போனாலும் நஜிப் எம்ஏசிசி-யை கலைத்து விடுவது நல்லது. ஏனெனில் எம்ஏசிசி ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமைக்கப்படவில்லை, ஊழலை மறைப்பதற்காக அமைக்கப்பட்டது என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்,” என லிம் இன்று விடுத்த அறிக்கையில் கூறினார்.
அனைத்துலக அரசு சாரா அமைப்பான Global Witness கடந்த மாதம் வெளியிட்ட ‘அதிர்ச்சி அளிக்கும்’ வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீது எம்ஏசிசி தொடங்கியுள்ள விசாரணை பற்றிக் கருத்துரைத்த தாயிப் தாம் ‘பழி வாங்கப்படுவதாக’ குறிப்பிட்டிருந்தார்.
“எம்ஏசிசி-க்கு நான் ஒத்துழைப்புக் கொடுக்க மாட்டேன். ஏனெனில் அது குறும்புத்தனமாக நடந்து கொள்கிறது. அது கௌரவமாக இயங்கவில்லை,” என தாயிப் கோலாலம்பூரில் பிஎன் உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
எம்ஏசிசி தன்னைப் ‘பழி வாங்குவதாக’ சொல்வதை தாயிப் நிரூபிக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக்
கொண்டார்.
எம்ஏசிசி விசாரணைக்கு ஒரு முதலமைச்சர் ஒத்துழைக்க மறுப்பது “கடமையை கடுமையாக மீறியதற்கு’
ஒப்பாகும் என்றார் அவர்.
“அவ்வாறு விசாரணை செய்யப்படுவதற்கு மறுப்பதற்கு எம்ஏசிசி சட்டத்தின் கீழ் குற்றமாகும். அதற்கு கூடின பட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே
விதிக்கப்படலாம்.”
தாயிப்பின் நடத்தை மீது நடவடிக்கை எடுப்பது இப்போது நஜிப்பைச் சார்ந்துள்ளது. அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதாக அவர் மீது பழி சுமத்தப்படலாம் என்றார் லிம்.
“அவமானத்தைத் தரும் கருத்துக்களைச் சொன்ன தாயிப் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கும்
துணிச்சல் நஜிப்புக்கு வருமா என்பதைக் காண மலேசியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.”