பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் உதவித் தொகை கொடுப்பதை நிறுத்தாது

1 rafiziபக்காத்தான் எதிர்வரும் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தாலும் இப்போதைய  அரசாங்கம் கொடுத்துவரும் உதவித் தொகையை  நிறுத்தாது என்று வாக்குறுதி அளிக்கிறார் பிகேஆ வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி.

இன்னும்கூட கூடுதல் ரொக்க அன்பளிப்புகள் செய்யப்படும்.  அவை வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப்படும் என்றாரவர்.

“நிச்சயமாக, அவை பிரிம் என்று அழைக்கப்பட மாட்டா. பொதுப்படையாகக் கொடுக்கப்படாமல் ரிம3,000க்குக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படும்.  உண்மையிலேயே தேவையுள்ளவர்களுக்கு, இல்லத்தரசிகள் போன்றோருக்கு மட்டுமே அவை கொடுக்கப்படும்”.

1 rafizi1அதற்காக உதவித் தொகைகளே  பக்காத்தான் பொருளாதாரத் திட்டங்களின் மையமாக விளங்கும் என நினைத்துவிட வேண்டாம்.

“மக்களின் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்”, என்று ரபிஸி குறிப்பிட்டார். அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

பக்காத்தான் பிரிமுக்கு எதிரியல்ல என்று கூறிய ரபிஸி, அப்படிப்பட்ட ரொக்க அன்பளிப்புகளால் மட்டுமே மக்களின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டிட முடியாது என்றார்.

‘அதைவிட விலைவாசியைக் குறைப்பது நல்லது’

“பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையின்படி பிரிமுக்காக ஆண்டுக்கு ரிம11 பில்லியன்வரை அரசாங்கம் செலவிடும்”, என்று கூறிய அவர் இப்படிப்பட்ட உதவித் தொகை காலம்தோறும் கூடி வரும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அப்பணத்தைக் கொண்டு அவர்களின் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத்  தீர்வு காணலாம். எண்ணெய் விலையைக் குறைக்கலாம். அதற்குக் குறைந்த அளவே செலவாகும்.

“எண்ணெய் விலையை (ஒரு லிட்டருக்கு) 40 சென் குறைக்க ஆண்டுக்கு ரிம6.8 பில்லியன்தான் செலவாகும்”, என்றாரவர்.

பிரிம் என்ற பெயரில் கொடுக்கப்படும் உதவிகள் எல்லாம் விலைவாசி உயர்வாலும் ஊழல் போன்றவற்றாலும் நீர்த்துப்போகும் என்று ரபிஸி குறிப்பிட்டார்.