ஹாடி: ‘சமூக நல நாடு’ எளிதாக புரிந்து கொள்ளக் கூடியது

ஹாடிஇஸ்லாமிய நாடு என்னும் கோட்பாட்டிலிருந்து சமூக நல நாடு அல்லது negara berkebajikan என்னும் தத்துவத்திற்கு தனது வியூகத்தை திருத்தி அமைத்துக் கொண்டிருப்பதின் மூலம் பாஸ் கட்சி தனது இஸ்லாமிய  அடித்தளத்தை குறைத்துக் கொள்ளவில்லை என அது இன்று வலியுறுத்தியுள்ளது.

மாறாக மென்மேலும்  எளிதாகப் புரிந்து கொள்ளும் பொருட்டும் முரண்பாடான எண்ணங்களைத் தவிர்க்கவும் அது அந்தத்  திருத்தத்தை செய்துள்ளது.

“சமூக நல நாடு என்பது இஸ்லாத்தின் மேலும் விரிவான வெளிப்பாடு ஆகும். இஸ்லாம் என்பது ஒரு சொல்
மட்டுமே, சமூக நல நாடு என்பது அதன் விளக்கமாகும்,” எனக் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்
இன்று கூறினார்.

அவர் ஷா அலாமில் மலாய் நாளேடான சினார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கூட்டத்தில்
பேசினார்.

இஸ்லாமிய சிந்தனைகளுக்கு இணங்க நீதியான ஆளுமையை உருவாக்க அந்த இஸ்லாமியக் கட்சி இன்னும்
போராடி வருவதாகவும் ஹாடி வலியுறுத்தினார்.

“நாங்கள் முஸ்லிம் அல்லாதார் மேலும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய மொழியை பயன்படுத்துவது தான்
இதில் முக்கியமானது,” என அந்த மூத்த பாஸ் தலைவர் சொன்னார்.

நடப்பு அனைத்துலக சூழ்நிலையில் இஸ்லாம் என்ற சொல் துரதிர்ஷ்டவசமாக சகிப்புத் தன்மை இல்லாமை,
தீவிரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளதாக விளக்கிய ஹாடி அதனால் அதன் மீது
முரண்பாடான எண்ணங்கள் ஏற்படுகின்றன என்றார்.