அரசாங்க ஓய்வூதியக்காரர்களுக்கு உயர்வான ஒய்வூதியங்களை வழங்கப்படும் என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோடி காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர்களைச் சந்தித்த நஜிப் அவ்வாறு கூறினார்.
என்றாலும் அது பொருளாதார சூழ்நிலைகளைப் பொறுத்தது என்றும் அதனால் நாடு நொடித்துப் போகாமல்
இருப்பதும் உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
“ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் இரண்டு விழுக்காடு கூடுகின்றது. ஆனால் அது குறைந்த பட்சம் தான்.
அரசாங்கத்திடம் பணம் இருந்தால் நாங்கள் அதனை அதிகரிப்போம்.”
“பிரச்னை ஏதுமில்லை. ஆனால் நாம் முதலில் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி வருமானத்தைப் பெருக்க
வேண்டும்,” என நஜிப் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மய்யத்தில் மூவாயிரம் முன்னாள் அரசாங்க
ஊழியர்களிடம் கூறினார்.
நஜிப் 30 நிமிடங்களுக்கு உரையாற்றிய போது பிஎன் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்
தொடர்பில் அவர் பல அம்சங்களைக் குறிப்பிட்ட போது அங்கிருந்தவர்கள் உற்சாகத்துடன் கை தட்டினர்.
பணவீக்கத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு 2012 வரவு செலவுத் திட்டத்தில் ஆண்டு இரண்டு
விழுக்காடு ஓய்வூதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.