“1928-ல், தமிழ் நாட்டில் பிறந்து 1950-களில் இந்நாட்டில் ரப்பர் மரம் சீவ கொண்டுவரப்பட்ட என் தந்தை செல்லப்பன் (வயது 88) மற்றும் 1956-ல் என் தந்தையை மணம் முடித்து , இங்கு குடியேறிய என் தாய் திருமதி செல்லம்மா (வயது 74) இருவருக்கும் இந்நாட்டில் குடியுரிமை பெற தகுதியில்லையா?” என்று கேள்வியெழுப்பினார் இவர்களின் மகன் தியாகராஜன்.
“என் பெற்றோர் அகதிகளோ அல்லது சட்டவிரோத குடியேறிகளோ கிடையாது. ஆரம்பக் காலங்களில் இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்த ரப்பர் தோட்டங்களில் தங்கள் உடல் உழைப்பையும் வியர்வையையும் சிந்தியவர்கள். இவர்கள் ஜொகூர் மாநிலத்தில் உலு ரெமிஸ் தோட்டத்தில் ரப்பர் மரம் சீவும் தொழிலாளர்களாக வேலை செய்தவர்கள்.”
“என் தந்தை 63 ஆண்டுகளாகவும் தாயார் 57 ஆண்டுகளும் இம்மண்ணில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் வாழ்நாளில் இவர்கள் அரசாங்கத்தின் எந்த சமூகநல உதவிகளையும் பெற்றதில்லை. தொடர்ந்து 10-12 ஆண்டுகள் இந்நாட்டில் குடியிருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 6 பிள்ளைகள், 19 பேரப்பிள்ளைகளும் இவர்களுக்கு இருக்கின்றனர். மேலும், நீண்ட காலம் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்களை முன்வைத்தும் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.” என கூறுகிறார் தியாகராஜன்.
பலமுறை விண்ணப்பம் செய்தும், தகுதியில்லை என்று பதில் வந்தது. புத்ரா ஜெயாவிற்குத் தொடர்பு கொண்டு கேட்டால், மேலதிகாரிகள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகின்றனர். தகுதி பெறுவதற்கு என்ன வேண்டும் என்று விளக்கப்படுத்துவதும் இல்லை.
கீழ்மட்ட தலைவர்கள் முதல் மேல்மட்ட தலைவர்கள் வரை சந்தித்தாகிவிட்டது. சிறப்பு அமலாக்க பிரிவினரிடமும் விவாதித்துவிட்டோம். சரியான பதில் இல்லை. மை டப்தார் மூலமும் முயற்சி செய்து, இதுவரை எந்த பதிலும் இல்லை என அவர் சொன்னார்.
தேசிய முன்னனி அரசாங்கத்தில் உள்ள இந்திய அரசியல் தலைவர்கள், குறிப்பாக , இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாக கூறும் மஇகா கட்சிக்கு மேல்மட்ட அரசியலில் எந்த ஆளுமையும் அதிகாரமும் பெற்றிருக்கவில்லை. அவர்கள் அம்னோவின் மேலாண்மைக்கு அடங்கி, தங்களின் கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள , தேர்தலில் சில இடங்களைப் பெற்று காலம் தள்ளுகின்றனர். இவர்கள் மக்களின் உரிமைக்கோ நீதிக்கோ போராடுவார்கள், பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என தியாகராஜன் கூறினார்.
நாடு சுதந்திரமடைந்து 57 ஆண்டுகள் ஆகியும், என் பெற்றோர் போன்று இலட்சக்கணக்கானோர் இந்த அடையாள அட்டை பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதை அறியும் போது மிகவும் வேதனையாக உள்ளது. இந்தியத் தலைவர்கள் இந்த அடிப்படை பிரச்சனையைக் கூட தீர்க்க முடியாத போது, எப்படி மக்கள் மத்தியில் நம்பிக்கை பெறுவார்கள்? ஆளும் அரசியல்வாதிகள் மக்களின் உரிமைக்காக தங்கள் பதவியைத் துருப்பு சீட்டாக பயன்படுத்த வேண்டும். உதவிதொகையைப் பெற்றுதரும் ஏஜெண்டாக மட்டும் இருக்கக் கூடாது.
தேர்தல் நேரங்களில் குறிப்பிட்ட சிலருக்கு அடையாள அட்டையைக் கொடுத்து , அவர்களைத் தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். முழுமையாக இப்பிரச்சனையைத் தீர்க்கும் நோக்கத்தையும், செயல்வடிவத்தையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை. இந்தியர்களின் பிரச்சனைகளைக் கவனிக்க புதிதாக அமலாக்கப் பிரிவு உருவாக்க வேண்டியதில்லை. இதனால் மட்டும் பிரச்சனை தீர்ந்துவிடாது. சம்மந்தப்பட்ட இலாக்காவில் முறையான, சுலபமான வழிமுறைகளை வகுத்தாலே போதுமானது. தற்போது சிறப்பு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பிரச்சனைகளைத் தீர்க்கும் அதிகாரம் ஏதும் கொண்டிருக்கவில்லை. மாறாக, அரசியல்வாதிகளைப் போல், தேசிய முன்னனிக்கு ஆதரவாக அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என அவர் சாடினார்.
பிறப்பு பத்திரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக போராட முன் வருபவர்களைக் குறை கூறிக்கொண்டு, சவால் விட்டுக்கொண்டு இருக்காமல், முறையாக பதிந்தவர்களுக்கு தீர்வு கிடைக்க உருப்படியான வழியைக் காணுங்கள். அறிவுக்கெட்டாத விதிமுறைகளை முதலில் கலைந்தால்தான் இப்பிரச்சனைக்கு ஒரு வழி காண முடியும். இல்லையெனில், இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லை என தியாகராஜன் கூறினார்.