‘முக்ரிஸை கெடா மந்திரி புசாராக பெயர் குறிப்பிடப்படுவது இன்னும் முடிவு செய்யாத வாக்காளர்களை ஈர்க்க உதவும்’

mukhrizகெடா மாநிலத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுமானால் நடப்பு ஜெர்லுன் உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் மந்திரி  புசாராக நியமிக்கப்படுவார் என்பதற்கு வலுவான அறிகுறிகள் அனுப்பப்பட்டால் ‘இன்னும் முடிவு செய்யாத  வாக்காளர்களை பிஎன் -னுக்குச் சாதகமாக ஈர்க்க முடியும்’.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையில் யூகேஎம் என்ற மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்  போது அது தெரிய வந்துள்ளதாக அதன் அரசியல் அறிவியலாளர் சம்சு அடாபி மாமாட் கூறினார். அந்த ஆய்வு முடிவுகள் விவரமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார் அவர்.

“கெடாவில் பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்கு அந்தக் கூட்டணி “இன்னும் முடிவு செய்யாத வாக்காளர்களை” கவரக் கூடிய மந்திரி புசார் வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என்ற கருத்து அந்த ஆய்வின் வழி அறியப்பட்டுள்ளது.”

“இன்னும் முடிவு செய்யாத அந்த வாக்காளர்கள்” முக்ரிஸின் தலைமைத்துவப் பண்புகளை மதிக்கின்றனர் என்பது கெடா மாநிலத்தில் நிலவும் பொதுவான உணர்வாகும்.

அது போன்ற ஆய்வை யூகேஎம் கெடாவில் மட்டுமின்றி சிலாங்கூர், கிளந்தான், பினாங்கு ஆகியவற்றிலும்  நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் இம்மாதப் பிற்பகுதியில் சமர்பிக்கப்படும்.

முக்ரிஸ் இப்போது பராமரிப்பு அரசாங்கத்தில் அனைத்துலக வாணிக, தொழிலியல் துணை அமைச்சராகப்  பணியாற்றி வருகிறார்.

அவர் பெரும்பாலும் பிஎன் -னின் கெடா மந்திரி புசார் வேட்பாளராக இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இன்னொரு மந்திரி புசார் வேட்பாளர் எனக் கருதப்படும் கெடா பிஎன் தொடர்புக் குழுத் தலைவர் அகமட் பாஷா முகமட் ஹனிபாவை விட முக்ரிஸ் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

ஜெர்லுன் நாடாளுமன்றத் தொகுதியில் முக்ரிஸ் 2008ல் 2,205 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2008ல் அந்தத் தொகுதியில் உள்ள ஆயர் ஹித்தாம் சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி குறுகிய பெரும்பான்மையில் பிடித்தது. இன்னொரு சட்டமன்றத் தொகுதியான கோத்தா சிபுத்தே பிஎன் வசமுள்ளது.

அகமட் பாஷா தமது பாக்கார் பாத்தா தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அங்கு மீண்டும் நிறுத்தப்படுவார் எனக் கருதப்படுகிறது. 2008ல் அந்தத் தொகுதியில் அவர் மிகவும் குறுகிய 358 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

பிஎன் ‘பாதுகாப்பான’ தொகுதிகள் என அறிவித்துள்ள 22 இடங்களில் ஆயர் ஹித்தாமும் கோத்த சிபுத்தேயும் அடங்கும். பாக்கார் பாத்தா-வில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சீனர்களாக இருப்பதால் அது ‘பழுப்பு’ எனக் கூறப்பட்டுள்ளது.

2008ல் சிறுபான்மை சீன சமூகம் பெரும்பாலும் பிஎன் -னுக்கு எதிராகவே வாக்களித்துள்ளது.