அம்னோ: முஸ்தாபாவும் ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

mustafaசெக்ஸ் வீடியோ விவகாரத்தில் அம்னோவை இழுத்ததற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலியும் அந்தக் கட்சியின் அதிகாரத்துவ ஏடான ஹாராக்காவும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரும் கடிதம் ஒன்றை நேற்று அம்னோ சமர்பித்தது.

இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அந்த வீடியோவில் முஸ்தாபாவைப் போன்று தோற்றமளிக்கும்  ஒருவர் இளம் மாது ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதைக் காட்டுகின்றது. ஆனால் அந்த வீடியோவில்  இருக்கும் ஆடவர் தாம் எனக் கூறப்படுவதை முஸ்தாபா தமது வழக்குரைஞர் அஸ்முனி அவி வழி  மறுத்துள்ளார்.

டுங்குனில் செராமா ஒன்றில் உரையாற்றிய முஸ்தாபா அந்த செக்ஸ் வீடியோவுக்கு அம்னோ மீது பழி போட்டதாக கூறப்பட்ட செய்தி ஹாராக்கா ஏட்டில் வெளியானது.

அம்னோவிடம் மன்னிப்புக் கேட்பதற்கு முஸ்தாபாவுக்கு 24 மணி நேர அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அம்னோ சட்ட ஆலோசகர் முகமட் ஹபாரிஸாம் கூறினார்.

“எல்லா குற்றச்சாட்டுக்களும் ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்டுள்ளன. நாங்கள் அதனைக் கடுமையாகக்
கருதுகிறோம். ஏனெனில் அம்னோவின் தோற்றத்திற்கு குறிப்பாக பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் களங்கத்தை ஏற்படுத்த அவ்வாறு செய்யப்பட்டுள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.

முஸ்தாபா அறிக்கை ‘அவதூறானது’

மலேசியாவில் உள்ள பெரிய நாளேடுகளிலும் மலேசியாகினி இணைய தளத்திலும் ஏப்ரல் 13ம் தேதி அந்த அறிக்கை வெளியானதால்  அவருக்கு எதிராக Hafarizam, Wan &  Aisha Mubarak நிறுவனம் வழி அந்த நடவடிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹபாரிஸாம் சொன்னதாக   அம்னோ இணையத் தளம் கூறியது.

அந்த வீடியோ சம்பவத்துக்கு அம்னோ திட்டமிட்டது என்ற அர்த்தத்தைக் கொடுப்பதால் முஸ்தாபா அறிக்கை அவதூறானது என்றும் ஹபாரிஸாம் கூறிக் கொண்டார்.

அந்தக் கோரிக்கைக் கடிதம் கிடைத்துள்ளதை ஹாராக்காவும் உறுதி செய்துள்ளது.

அந்த வீடியோ வியாழக்கிழமை தொடக்கம் பல அம்னோ ஆதரவு வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவின் விசிடி பிரதிகள் பெசுட்டில் பல வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை போலீசார் கைப்பற்றியதுடன் விசாரித்தும் வருகின்றனர்.

TAGS: