பக்காத்தான் ரக்யாட், 1மலேசியா கொள்கையின் வெற்றி கண்டு அது மக்களின் நெஞ்சைக் கவர்ந்திருப்பதை எண்ணி பயந்து போயிருப்பதாக மசீச நினைக்கிறது. அதுதான், 13வது பொதுத் தேர்தலில் 1மலேசியா அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படுவதற்கு பக்காத்தான் ரக்யாட்டுடன் தொடர்புகொண்ட என்ஜிஓ-வான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஏஎம்) திடீர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு காரணமாகும்.
“1மலேசியாவின் வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மலேசியர்களின் நெஞ்சைக் கவர்ந்து விட்டது. மக்கள் அதை வரவேற்கிறார்கள். இதனால் பக்காத்தானுக்குப் பொறாமை. அதைக் கண்டு பயப்படுகிறார்கள். அது, வெறுப்பையும் வன்செயல்களையும் தூண்டிவிட்டு மக்களை வேறுபடுத்தும் அவர்களின் அரசியல் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டது”, என மசீச விளம்பரப் பிரிவு தலைவர் ஹெங் சியாய் கை (வலம்) கூறினார்.
1மலேசியாவை உருவாக்கியவர் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக். அப்படியிருக்க அச்சின்னத்தை பிஎன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது “அநியாயமாகும்” என்றாரவர்.
நேற்று எஸ்ஏஏம் 1மலேசியா சின்னத்தை பிஎன் அதன் பதாதைகளிலும் சுவரொட்டிகளிலும் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது . 1மலேசியா என்பது தேசிய அரசாங்கத்தால் பொதுப்பணத்தைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் இயக்கம் என்பதால் அதன் சின்னம் மலேசியர் அனைவருக்கும் சொந்தமானது. அது, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல என்றது கூறியது.
“எஸ்ஏஏம் இவ்வளவு வேகமாக முன்வந்து 1மலேசியாவைத் தேசிய சொத்து என்று சொந்தம் கொண்டாடும்போது சிலாங்கூரின் பக்காத்தான் அரசு ஏன் அதை நிராகரித்தது, ஏன் அச்சின்னத்தை விளம்பரப் பலகைகளிலும் கடைகளிலும் காட்சிக்கு வைக்கக்கூடாது எனத் தடை விதித்தது?”.
அப்போது மவுனமாக இருந்த எஸ்ஏஏம் இப்போது “இரட்டை நியாயம்” பேசுவது அதன் நோக்கத்தைச் சந்தேகிக்க வைக்கிறது என்றாரவர்.
தம் குற்றச்சாட்டு தவறு என்று கூறி 1மலேசியா தேசிய சொத்துத்தான் என்றவர்கள் வாதாடுவார்களானால் பக்காத்தானிடம் 1மலேசியா சின்னத்தை அவர்களின் சட்டைகளில் அணியவும் பதாதகளிலும் சுவரொட்டிகளிலும் இணைத்துக்கொள்ளவும் வேண்டும் என்று கூற எஸ்ஏஏம் தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார். மேலும், டிஏபியிடம் அதன் “மலேசியர் மலேசியா” கொள்கையை “1மலேசியா கொள்கை” என மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறிட வேண்டும்.