13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவு செய்யப்படாதவர்களும் கைவிடப்பட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பினாங்கு பிஎன் தனது வேட்பாளர் பட்டியலை மறு ஆய்வு செய்யாது.
அந்தப் பட்டியல் இறுதியானது. உள் சதிகாரர்கள் மீதான தனது நிலையில் பிஎன் கூட்டணி உறுதியாக இருக்கிறது என மாநில பிஎன் தலைவர் தேங் சாங் இயாவ் கூறினார்.
கைவிடப்பட்டதால் போர் பிரகடனம் செய்துள்ள மூன்று பிஎன் தலைவர்கள் பற்றி வினவப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.
“நான் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். விரும்பினால் சுயேச்சைகளாகப் போட்டியிடுவது அவர்களைப்
பொறுத்தது,” என்றார் தெங்.
“நான் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் கட்சி நலனைக் காட்டிலும் சுய நலனை மேலாகக் கருதுகின்றனர்.”
நேற்றிரவு பிஎன் பத்து கவான் ஒருங்கிணைப்பாளர் ஏ மோகம் கெரக்கானிலிருந்து விலகிக் கொண்டதுடன் தமது கிளையையும் மூடி விட்டார். தம்முடன் அந்தக் கிளையில் இருந்த 192 உறுப்பினர்களையும் அவர் கொண்டு சென்று விட்டார்.
கீத்தா எனப்படும் Parti Kesejahteraan Insan சின்னத்தில் சட்டமன்றத் தொகுதி ஒன்றிலும் பத்து கவான்
நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடலாம் என தாம் எண்ணியுள்ளதாக மோகன் சொன்னார். வேட்பாளர் நியமன நாளான சனிக்கிழமை தமது முடிவை அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
பிஎன் பினாங்கு வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தாசெக் குளுகோர் முன்னாள் எம்பி-யான ஷரிப் ஒமார் ‘பக்காத்தான் ராக்யாட் நட்புறவு சுயேச்சையாக’ தாம் அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.
அவரது குழுவைச் சேர்ந்த இரண்டு பேரும் சுங்கை டுவா, தெலுக் ஆயர் தாவார் ஆகியவற்றில் தாங்கள் விரும்பும் வேட்பாளர் நிறுத்தப்படா விட்டால் போட்டியிடப் போவதாகவும் மருட்டியுள்ளனர்.
நேற்றிரவு ஷரிப் நடத்திய செராமாவில் கலந்து கொண்ட நடப்பு சுங்கை டுவா உறுப்பினர் ஜாஸ்மின் முகமட்-டும் அந்தப் பட்டியல் மீது அதிருப்தி தெரிவித்தார்.