ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்

kamiliahதம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார்.

அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்கை கூட்டணி அங்கீகரிக்கத் தவறி விட்டதையே அது  காட்டுகிறது என அவர் சொன்னார்.

மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் போட்டியிட மறுத்து விட்டதைத் தொடர்ந்து அந்தப் பிரிவின்  அடுத்த தலைவி தாம் எனக் குறிப்பிட்ட காமிலியா, தாம் தொகுதித் தலைவராக இருக்கும் கோலா கங்சாரில்  தாம் நிறுத்தப்படலாம் என எதிர்ப்பார்த்ததாகச் சொன்னார்.

தாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தால் அரசியலில் தீவிர ஈடுபாடு கொள்ளவும் மகளிருக்காக முடிவுகளைச்  செய்யவும் தமக்கு வலிமை கிடைத்திருக்கும் என அவர் சினார் ஹரியான் நாளேட்டிடம் கூறினார்.

“என்னையும் மகளிர் பிரிவில் உள்ள மற்ற பெண்களையும் பிஎன் ஒதுக்கியிருப்பது எனக்கு வியப்பை
அளித்துள்ளது. அம்னோ மகளிருக்கு பொருத்தமான அங்கீகாரம் கிடைக்காதது எனக்கு ஏமாற்றத்தை
அளித்துள்ளது,” என அவர் சொன்னதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கெடா, ஜோகூர், திரங்கானு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் தலைவிகள் உட்பட பல மாநில மகளிர்
தலைவிகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றும் கமிலியா சொன்னார்.

இதனிடையே பிஎன் பட்டியல் மீது நெகிரி செம்பிலானிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமது தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடவிருக்கும் நடப்பு ஜெம்போல் எம்பி லிலா யாசினுக்கு  எதிராக பெல்டா பாலோங் 11ஐ சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த ஏடு  செய்தி வெளியிட்டுள்ளது.

அதே மாநிலத்தில் உள்ள ஜோஹோலில் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகமட் பாட்சில் அபு காசிமை ஆட்சேபித்து எட்டு பிஎன் நடவடிக்கை மய்யங்கள் மூடப்பட்டுள்ளன.

சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக டாக்டர் இயாவ் சாய் தியாம் நியமிக்கப்பட்டதை
ஆட்சேபித்து எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜோகூர் பாருவில் புதுமுகமான மஇகா-வின் எம் சூரிய நாராயணன் புத்ரி வாங்சாவில் நிறுத்தப்பட்டதை எதிர்த்து தாமான் தேசா முத்தியாராவைச் சேர்ந்த 50 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்னோவைச் சேர்ந்த ஒருவர் அங்கு நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரினர்.

கிளந்தான் குவா மூசாங் அம்னோ தொகுதியைச் சேர்ந்த குழு உறுப்பினரான அஜிஸ் முகமட் நெங்கிரி
சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

TAGS: