13வது நாடாளுமன்றத்திற்கான போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது
மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 505 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டி நிகழும். சரவாக்
சட்டமன்றத்தில் உள்ள 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறாது.
நாடு முழுவதும் பினாங்கு, ஜோகூர், மலாக்காவில் சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் இன்று காலை
வானிலை நன்றாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் நியமனங்கள் காலை 9 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப் பின்னர் தேர்தல் ஆணையம் அவற்றை ஆய்வு செய்யும்.
இந்த முறை எந்த ஒரு சாத்தியமான வேட்பாளருக்கு எதிராகவும் ஆட்சேபம் செய்ய முடியாது. காரணம் அந்த நடைமுறையை அகற்றுவதற்கு உதவியாக தேர்தல் விதி முறைகளை தேர்தல் ஆணையம் திருத்தி விட்டது.
பிஎன் கூட்டணியிலும் பக்காத்தான் கூட்டணியிலும் இந்த முறை வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படாத பலர் சுயேச்சைகளாக போட்டியிடக் கூடும் என்பதால் பல தொகுதிகளில் பன்முனைப் போட்டி நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிஏபி தலைமைத்துவ அணியை தான் அங்கீகரிக்காத போதும் அது தனது சின்னத்தைத் தேர்தலில் பயன்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப் போவதில்லை என சங்கப் பதிவதிகாரி அறிவித்துள்ளதால் அந்த கட்சி தனது சின்னத்தைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வேட்பாளர்களை தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததும் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி 15 நாட்களுக்கு நீடிக்கும். மே 4ம் தேதி நள்ளிரவு வாக்கில் பிரச்சாரம் முடிவுக்கு வரும். தேர்தல் மே5ம் தேதியாகும்.