அம்னோ மகளிர் துணைத் தலைவர் சுயேச்சை வேட்பாளரானார்

1 kamiliaஅம்னோ மகளிர் துணைத் தலைவர் கமிலியா இப்ராகிம், கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

இதனால் அத்தொகுதியில்  மும்முனை போட்டி உருவாகியுள்ளது. அவருடன் கலில் இதாம் லிம்(பாஸ்), வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட் (பிஎன்) ஆகியோரும் அங்கு களமிறங்குகின்றனர்.

பிஎன்,  அவருக்கு அவர் விரும்பிய தொகுதியைக்  கொடுக்காமல் புக்கிட் சண்டான் சட்டமன்றத் தொகுதியைக் கொடுக்க முடிவு செய்ததால் கமிலியா சுயேச்சையாகக் களமிறங்கத்  தீர்மானித்தார்.

நேற்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக்,  கமிலியாவுக்கு சட்டமன்றத் தொகுதி வழங்கப்படுவது  அவரது சேவையை பிஎன் மதிக்கிறது என்பதற்கு அடையாளமாகும் என்று கூறியிருந்தார்.  அத்துடன் அவர் ஆட்சிக்குழு உறுப்பினராக்கப்படுவார்  என்றும் கூறப்பட்டது.

“அவர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.  ஆனால், கமிலியா சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்.

“காலஞ்சென்ற லிம் கெங் ஏய்க்-கூட கெராக்கான் தலைவராக  இருந்தாலும் மாநில ஆட்சிக்குழு பதவி கொடுக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டார்”, என  நஜிப் குறிப்பிட்டார்.

கமிலியா, முன்னாள் அம்னோ மகளிர் தலைவியும் கோலா கங்சார் முன்னாள் எம்பியுமான ரபிடா அசீசின் உறுதியான ஆதரவாளராவார்.

அத்துடன் அவர், நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரம் தொடர்பில் நடப்பு அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் அசீஸை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS: