பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அடுத்த பிரதமராக்குவதற்கு டிஏபி ஒப்புக் கொண்டால் ஜோகூருக்குப் பேரழிவு ஏற்படும் என பிஎன் கேலாங் பாத்தா வேட்பாளரும் நடப்பு ஜோகூர் மந்திரி புசாருமான அப்துல் கனி ஒஸ்மான் எச்சரித்துள்ளார்.
அதன் தாக்கங்கள் குறித்து தாம் கவலைப்படுவதாக அப்துல் கனி ஸ்கூடாய் தாமான் மெலாவத்தியில் நிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர்களிடம் கூறினார்.
“நமது எதிர்காலப் பிரதமர் ஹாடி அவாங் என டிஏபி ஒப்புக் கொண்டுள்ளது உண்மை என்றால் நம்மை அவர்
என்ன செய்யப் போகிறார் என்பது மீது நானும் ஜோகூரும் கவலைப்பட வேண்டும். சரியா இல்லையா ?”
அந்தத் தகவலுக்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது கனி அளித்த பதில்:
எனக்குத் தெரியாது. நான் பத்திரிக்கைகளில் படித்தேன்.”
புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் பிரதமர் பொறுப்புக்கு பிகேஆர் மூத்த தலைவர்
அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கப் போவதாக டிஏபி திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றது.
ஆனால் மூன்று பக்காத்தான் கட்சிகளில் அதிகமான உறுப்பினர்களையும் வலுவான நிர்வாக எந்திரத்தையும்
கொண்டுள்ள பாஸ் கட்சி பக்காத்தானில் ஆதிக்கம் செலுத்தும் என்றும் பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் பதவியைப் பிடுங்கிக் கொள்ளும் என்றும் பிஎன் குறிப்பாக மசீச, சீனர்களை எச்சரித்து வருகின்றது.
அதே வேளையில் பக்காத்தான் கூட்டணியில் டிஏபி ஆதிக்கம் செலுத்தும் என மலாய் வாக்காளர்களை நம்ப
வைக்க அம்னோ முயன்று கொண்டிருக்கிறது.
ஸ்கூடாய் சீன வாக்காளர்களைச் சந்திப்பதற்கான கூட்டம் என வருணிக்கப்பட்ட அந்தக் கலந்துரையாடலில்
கனியை சந்திக்க பிஎன் ஆதரவாளர்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தனர்.
என்றாலும் அந்த நிகழ்வுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள். மசீச தேர்தல் எந்திரத்தைச்
சார்ந்த சில சீனர்களும் அங்கு இருந்தார்கள்.
“அதிகாரப்பூர்வ நிகழ்வுகளோடு மக்களைச் சந்திக்கவும் நான் விரும்புகிறேன்,” என்றார் அவர்.
கனி-க்கு அவகாசம் தேவைப்படுகின்றது
கனி நான்கு தவணைக் காலத்துக்கு மந்திரி புசாராக தாம் பணியாற்றிய அனுபவத்தை விரிவாக எடுத்துரைத்தார். அனுபவம் இல்லாத, பிரிவினைப் போக்குடைய பக்காத்தான் ராக்யாட்டைத் தேர்வு செய்து எதிர்காலத்தைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் அவர் சொன்னார்.
தம்மை எதிர்க்கும் லிம் கிட் சியாங் பற்றிப் பேசிய அவர், பாஸ், அன்வார் ஆகியோருடன் லிம் கூட்டணி
வைத்துள்ளதால் அவரை நம்ப வேண்டாம் என சீன சமூகத்தைக் கேட்டுக் கொண்டார்.
அந்த நிகழ்வில் கேலாங் பாத்தா-வில் போட்டியிடுவதாக இருந்த கேலாங் பாத்தா மசீச தொகுதித் தலைவர்
ஜேசன் தியோவும் கலந்து கொண்டார்.
சீன சமூகத்தில் கனியின் செல்வாக்கு பற்றி அவரிடம் கேட்ட போது அவர் சுருக்கமாகப் பதில் அளித்தார்.
“எங்களுக்கு நேரம் தேவைப்படுகின்றது என நான் எண்ணுகிறேன். அந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பது சற்று
சிரமம். வருந்துகிறேன்.”
கனி கேலாங் பாத்தா எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை ஏற்பார் என்பதால் அவரை
ஆதரிக்குமாறு அங்கு கூடியிருந்த 20 பேரிடம் தியோ சொன்னார்.
அது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என கனி பின்னர் சொன்னார்.