சுல்கிப்லியை முத்தமிட்டது குறித்து இந்தியர்களுடைய ‘ஜுடாஸ்’ கவலைப்படவில்லை

judasவேட்பாளர் நியமன நாளன்று சர்ச்சைக்குரிய பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டினை கன்னத்தில் முத்தமிட்டதின் மூலம் இந்திய சமூகத்தின் எரிச்சலை சம்பாதித்து கொண்டு ‘ஜுடாஸ்’ என முத்திரை  குத்தப்பட்டுள்ள மனிதர், அது பற்றிக் கவலைப்படவில்லை.

மஇகா உறுப்பினர் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் என் தேவேந்திரன் என்ற அவரை  மலாய் மெயில் சந்தித்தது.

வேட்பாளர் நியமன நாளுக்குப் பின்னர் சமூக ஊடகங்களில் அவரது நடவடிக்கை  கடுமையான கண்டனத்திற்கு இலக்காகி வருகிறது

“வாழ்க்கை தொடருகிறது. மக்கள் குறிப்பாக இந்திய சமூகம் தான் விரும்புவதைச் சொல்லலாம். ஆனால் நான் தேர்வு செய்யும் ஒருவரை ஆதரிக்கும் உரிமை எனக்கு உண்டு. ஏனெனில் அது என் உரிமை,” என 32
வயதான அந்த வணிகர் சொன்னார்.

judas1ஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் கட்சியின் நடப்பு உறுப்பினர் காலித் சமாட்-டுக்கு எதிராக “பிஎன் நண்பர்” என்னும் அடையாளத்துடன் பிஎன் சின்னத்தில் போட்டியிடும் சுல்கிப்லிக்கு ஆதரவு கொடுக்க தாம் பணம்  பெற்றதாகக் கூறப்படுவதை தேவேந்திரன் மறுத்தார்.

“நான் பணத்துக்காக அதனைச் செய்யவில்லை,” என செக்சன் 23ல் பிஎன் பிரச்சார மய்யத்தில் சந்தித்த போது  அவர் சொன்னார்.

இந்துக்களை இழிவுபடுத்தி இந்தியர்களை அவமானப்படுத்தும் சொல் மூலம் குறிப்பிட்ட சுல்கிப்லி தேர்வு செய்யப்பட்டது  மீது தாம் தொடக்கத்தில் ஆத்திரமடைந்திருந்ததாகவும் தேவேந்திரன் தெரிவித்தார்.

அவரது நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வெகு வேகமாகப் பரவின.

“செக்சன் 9ல் உள்ள அம்னோ கட்டிடத்தில் வேட்பாளராக அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும் அந்த முடிவுக்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக என்னுடைய 100 ஆதரவாளர்களுடன் சென்றேன். அவரைத் தாக்கும் அளவுக்கு நான் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தேன்,” என அவர் மேலும் சொன்னார்.

“ஆனால் எங்களைச் சந்திக்க வெளியில் வந்த சுல்கிப்லி உடனடியாக தமது அறிக்கைகளுக்காக மன்னிப்புக்
கேட்டுக் கொண்டார்.”

judas2“அவர் கைகளை ஒன்று சேர்த்து மன்னிக்குமாறு மன்றாடினார்… அது மனதைத் தொட்டது உண்மையானதாகவும் இருந்தது. நானும் ஒரு மனிதன். ஆகவே அதனை ஏற்றுக் கொண்டேன். பக்காத்தான் ராக்யாட் தலைவர்  அன்வார் இப்ராஹிமை மக்கள் மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் சுல்கிப்லியையும் அதே மாதிரி  நடத்தக் கூடாது,” என தேவேந்திரன் வினவினார்.

சுல்கிப்லியின் கன்னத்தில் முத்தமிட்டது “மிதமிஞ்சிய பாசமாக” கருதப்படலாம் என்பதை ஒப்புக் கொண்ட அவர் அதற்காக வருந்தவில்லை.

அந்த விவகாரம் மீது இந்திய சமூகம் அவரை ஒதுக்கியதா என வினவப்பட்ட போது, பலர் தம்மிடம் கேள்வி எழுப்பினர் என்றும் ஆனால் அவர்களுக்கு பொறுமையாகப் பதில் அளித்ததாகவும் தேவேந்திரன் சொன்னார்.

கடந்த ஒர் ஆண்டாக தாம் மஇகா உறுப்பினராக இருந்து வருவதாக செக்சன் 7ல் வசிக்கும் அவர் சொல்லிக்
கொண்டார்.

மலாய் மெயில் எடுத்த அந்த படத்தினால் அவரை ஆயிரக்கணக்கான இணையப் பயனாளிகள் கடுமையாக குறை கூறியுள்ளது பற்றியும் தேவேந்திரன் கவலைப்படவில்லை.

“இது பிரச்சார காலம் என்பதால் அவர்கள் என்னை நினைவில் வைத்திருப்பர். ஆனால் 15 நாட்கள் கழித்து
முடிவுகள் வெளியான பின்னர் அவர்கள் என்னை முழுமையாக மறந்து விடுவார்கள்,” என புன்சிரிப்புடன்
அவர் சொன்னார்.

-மலாய் மெயில்